குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் அரசுகள் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடப்பது தெரியவந்துள்ளது. சிறுமிகளுக்கு நடத்தி வைக்கப்படும் திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், போலீசார், சமூக நலத்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோரின் கவனத்துக்கு தெரியாமல் ரகசியமாக இதுபோன்ற திருமணங்கள் மாவட்டத்தில் நடத்தி வைக்கப்படும் சம்பவங்கள் தற்போதும் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த 6 சிறுமிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர்  காவல் நிலையங்களில் நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 26 பேர் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டன.




பெரியகுளம் பங்களாபட்டியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதனால், அவர் மீதும் திருமணத்தை நடத்தி வைத்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டொம்புச்சேரியை சேர்ந்த குமார் என்பவர் கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதனால் அவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூதிப்புரம் பகுதியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவர் 17 வயது சிறுமியை கடந்த மே மாதம் திருமணம் செய்தார். அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகளும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.




 அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி 15 வயது சிறுமியை திருமணம் செய்த கடமலைக்குண்டு தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த அருண்குமார் (30), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்த டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (23) ஆகியோர் மீது ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய்த்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்த டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் (25) மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் என மொத்தம் 13 பேர் மீது ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.




குழந்தை திருமணம் நடந்து பல மாதங்களுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்களா? மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லையா? என்ற கேள்விகளை எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


https://bit.ly/2TMX27X


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண