தேனி அகமலை மக்கள் திடீர் முடிவு:
குடியிருக்க வீட்டுமனை வழங்காததால் சோற்றுப்பாறை அணை பகுதியில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தேர்தலுக்கு முன்பாக ஒதுக்கப்பட்ட இடத்தை மலை கிராம மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
மலைவாழ் மக்களின் அடிப்படை பிரச்சனை:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதிக்கு மேல் உள்ள போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கரும்பாறை, குறவன் குழி கிராமம். இந்த இரண்டு கிராமத்தில் 37 ஆதிவாசி பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கும் எந்த சலுகையும் சென்றடையாத நிலையில் குழந்தைகளின் படிப்பும் கேள்விக்குறியானது. இதனால் ஆதிவாசி பழங்குடியின மக்கள் குழந்தைகளின் படிப்பிற்காக அங்கிருந்து இடம் பெயர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு சோத்துப்பாறை அணை பகுதியில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் அரசு இலவச வீட்டு மனைகளை ஒதுக்கி தரக்கோரி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுவரையில் அரசின் இலவச வீட்டு மனை வழங்கவில்லை என்று கூறி இன்று சோத்துப்பாறை அணை பகுதிக்கு மேல் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிகள் முன்பாக ஆதிவாசி பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் அகமலை, கண்ணகரை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு:
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மேலும் இப்பபிரச்சனை குறித்து ஆதிவாசி பழங்குடி இன மக்கள் கூறுகையில் தங்கள் சமுதாயம் இதுவரையில் படிப்பறிவு இல்லாத நிலையில் தங்கள் குழந்தைகள் ஆவது கல்வி கற்று மற்ற சமுதாய மக்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக பழங்கால வாழ்க்கையை விட்டு வெளியே வந்த போதிலும், இதுவரையில் அரசாங்கம் எந்த உதவிகளும் செய்யாத நிலையில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் அரசின் இலவச வீட்டுமனையை வழங்கவில்லை என்றால், ஆதிவாசி பழங்குடியின மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.