தேனி மாவட்டத்தில் கிரசரில் தயாரிக்கும் கனிமவள பொருள்களின் விலை ஏற்றத்தை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்திடவும் விலையை நிர்ணயம் செய்திடவும் வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வால் கட்டுமானத்தின் மதிப்பீடு அதிகரிப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் தெரிவித்தனர்.
தமிழக கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழக மற்றும் கேரள பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் எம்சான்ட், பிசாண்ட் போன்ற மணலையும் உடைகற்களையும் மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளில் கிரசர்கள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். கிரசர்களில் இருந்து எடுக்கப்படும் கனிமவள பொருட்களை டிப்பர் லாரி மூலம் இரு மாநிலங்களுக்கும் கொண்டு சென்று கட்டுமான பணிகளை செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஜல்லி, எம்சாண்ட் , பிசாண்ட் போன்ற கனிம வளங்களின் விலைகளை திடீரென அதிகப்படியாக உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் தேனி மாவட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வரும் நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.புதிதாக அறிவித்துள்ள விலை ஏற்றத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வரும் நிலையில்,
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள கிரஷர் ஒன்றிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தார் கலவையை ஏற்றுக்கொண்டு கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் அசோசியேசன் சார்ந்தவர்கள் இந்த வாகனங்களை உத்தமபாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அதில் உள்ள ஆவணங்களை பரிசோதனை செய்துள்ளனர்.அந்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதன் பெயரில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் வணிகவரி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இந்த வாகனங்களை ஆய்வு செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் வணிகவரி அதிகாரிகள் காவல்துறையினர் இந்த டிப்பர் லாரிகளை தற்போது உரிய ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ததனர்.ஆவணங்கள் முறையாக இல்லாததால் அந்த டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் கட்டுமான பணிகள் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது