தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ரங்கநாதபுரம். இங்கு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (66). ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் இவரது மனைவி இறந்த பின்னர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கு சுகுமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவரது மகன் சுகுமார்(33) தனியார் நிதி நிறுவன வங்கியில் பணியாற்றி வருகிறார். சுகுமாருக்கு திருமணமாகாத நிலையில் மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தனக்கு திருமணம் முடித்து வைக்க கூறியும் சொத்தில் அதற்குரிய பங்கை பிரித்து தரக்கூடிய தகராறு செய்து வந்துள்ளார்.
குடிபோதையில் தொடர்ந்து தனது தந்தையிடம் தகராறு செய்து வந்த நிலையில் இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்து நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வழக்கம் போல மது அருந்திவிட்டு தனது தந்தை சுப்பிரமணியிடம் தகாத வார்த்தைகளை பேசி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து தனது தந்தையை குத்த முயன்றுள்ளார்.
சிந்து சமவெளியை திராவிட இனத்துடன் தொடர்புப்படுத்தியவர் - ஜான் மார்ஷலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணி ஆத்திரமடைந்து தனது மகனின் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி சுகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் சுகுமார் இருந்ததைக் கண்டு உடனடியாக போடிநாயக்கனூர் ஊரக காவல்துறையை தொடர்பு கொண்டு சுகுமாரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் வந்து பார்த்த பொழுது சுகுமார் அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த சுகுமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தந்தையே தனது ஒரே மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் போடி ரங்கநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.