போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலை  கிராமத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த நபருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல்  தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட  உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.




போடி அருகே சில மலை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் லட்சுமணன் (34). இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளன. இவர் கிராமத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். அருகில் உள்ள சூழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரின் மகள் அடிக்கடி இ-சேவை மையத்துக்கு வந்து சென்றதால் லட்சுமணனுக்கும், அந்த நபரின் மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தின் காரணமாக லட்சுமணன் அவரின் செல்போனிற்கு ஆபாச படங்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.




ஆபாச படம் வருவதை கண்ட மகளின் தந்தை தகராறு செய்துள்ளார். மேலும், லட்சுமணன் நடத்தி வந்த இ-சேவை மையத்திற்கு சென்று தகராறு செய்து கடையை உடைத்துள்ளனர். இதனால் லட்சுமணன் வீட்டுக்கு சென்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லட்சுமணன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் லட்சுமணன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் தடுத்து குற்றவாளியை கைது செய்தால் தான் உடலை  எடுக்க விடுவோம் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.




கிராம மக்கள் ஒன்று இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவதை அறிந்த தாக்குதல் நடத்திய குடும்பத்தினர் தப்பி ஓடி தலைமறைவாயினர். உடலை வாங்க மறுத்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்தன. இச்சம்பவம் அறிந்த போடி புறநகர் காவல் துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபடும் பொதுமக்களிடம் சமரசம் செய்ய முயற்சி செய்து கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.