உணவகம் ஒப்பந்த புள்ளி ஏலம்

 

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், பெரியோர், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வித்தியாசமான அனுபவங்களை பெற விரும்புகின்றனர். உணவு விஷயத்தில் கூட வித்தியாசமான இடங்களில் உணவு அருந்துவது, விதவிதமான உணவு அருந்துவது, கண்ணுக்கும் நாக்கிற்கும் சுவை தரும் உணவுகளை விரும்பி உண்ணுவது அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் பல்வேறு வகையான உணவகங்கள், பெருநகரங்களிலும் மற்றும் அதை சுற்றி உள்ள சிறு நகரங்களிலும் உருவாகத் தொடங்கி இருக்கின்றன. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக ரயில் பெட்டியில் உணவகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்த புள்ளி ஏலம் துவங்குகிறது.


 


ரயில் பெட்டி உணவகம்


மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக ரயில் பெட்டியில் உணவகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பெட்டி உணவகம் திண்டுக்கல் ரயில் நிலைய வெளிவளாக பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் அமைய இருக்கிறது. இதற்கான மின்னணு ஏல ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 


 

மின்னணு ஏலம்

 

உணவகம் நடத்துவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ள உணவக உரிமையாளர்கள் இந்த மின்னணு ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் உணவக உரிமையாளர் முதலில் தேவையான ஆவணங்களை அளித்து ரூபாய் 10,000 கட்டணத்துடன்  மின்னணு கையொப்ப சான்றிதழ் (Digital Signature Certificate - class III) பெற வேண்டும். ஒரு முறை இந்த சான்றிதழ் பெற்று விட்டால், அதன் மூலம் அனைத்து மின்னணு ஏலங்களிலும் பங்கு பெறலாம். ரயில்வே நிர்வாகம் ரயில் தண்டவாளம் அமைத்து ரயில் பெட்டி வழங்கிவிடும். அந்த ரயில் பெட்டியை ஒப்பந்ததாரர் அவரது செலவில் உணவகம் போல மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 2,625 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Indian Railway E-Procurement System

 

இந்த இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் அமைத்துக்கொள்ளலாம். மின்சாரம் குடிநீர் போன்ற வசதிகளை நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்களின் படி ரயில்வே நிர்வாகம் வழங்கும். ஒப்பந்ததாரர் தனது இந்திய ஸ்டேட் வங்கி கணக்கினை இந்திய ரயில்வே மின்னணு கொள்முதல் திட்ட (Indian Railway E-Procurement System) இணைய பக்கத்தில் ஒப்பந்ததாரர் விவரங்களோடு இணைக்க வேண்டும். வங்கிக் கணக்கில்  ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள தேவையான முன்வைப்புத் தொகை இருப்பில் இருக்க வேண்டும். பின்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் 02.30 மணி வரை நடைபெறும் இணைய ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு ரயில்வே நிர்ணயித்த ஓர் ஆண்டு உரிமை தொகைக்கு அதிகமாக ஏலத்தொகை குறிப்பிடப்பட்டிருந்த ஒப்பந்ததாரரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவருக்கு உரிமம் வழங்கப்படும். தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.