தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் முருகன் (50). அப்பகுதியில் இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். முருகன், கடந்த சில வாரங்களாக கோம்பை பண்ணைப்புரத்தில், 18-ம் கால்வாய் கரையில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு விவசாய கூலிவேலைக்கு சென்று வந்தார். அதன்படி, நேற்று முன்தினம் வழக்கம்போல் அந்த தென்னந்தோப்புக்கு வேலைக்காக அவர் சென்றிருந்தார். மாலையில் வேலை முடிந்ததும் முருகன் வீட்டிற்கு செல்லாமல், இரவு தோட்டத்திலேயே தங்கியுள்ளார்.




தோட்டத்தில் தனியாக தரையில் படுத்து ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். இந்தநிலையில் நள்ளிரவில் அந்த தென்னந்தோப்புக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அப்போது தோட்டத்தில் படுத்திருந்த முருகனை அந்த காட்டு யானை முதலில் காலால் எட்டி உதைத்தது.  யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்து எழுந்த அவர், மேலும் அவர் அங்கிருந்து தப்பிஓட முயன்றுள்ளார். அதற்குள் அந்த யானை, முருகனை தனது தும்பிக்கையால் தாக்கியது. யானை தாக்கியதில் நிலைகுலைந்த முருகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதற்கிடையே நேற்று காலை அங்குள்ள தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் மற்றும் கூலிதொழிலாளர்கள், முருகன் காயத்தோடு இறந்துகிடந்ததையும், அவரது அருகில் யானை சாணம் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த இடத்தில் யானையின் கால்தடங்கள் இருந்தன. உடனே இதுகுறித்து விவசாயிகள், உத்தமபாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.




அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் எப்படி இறந்தார் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில், யானை தாக்கியதற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. அதன்படி, காட்டு யானை தாக்கி முருகன் இறந்ததை உறுதி செய்தனர். இதற்கிடையே முருகன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் முருகனின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் முருகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், விவசாயிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண