தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.

  


வைகை அணை:


தென்மேற்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆனநிலையில் தேனி மாவட்டத்தில் இதுவரை போதுமான அளவு மழை பெய்யவில்லை. அதற்கு மாறாக கோடை காலங்களில் நிலவும் வெயிலின் தாக்கத்தை போல வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. போதுமான மழை இல்லாத காரணத்தால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.


 



தொடர் மழை:


இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வந்தது.  அணையில் நீர்இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. வைகை அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் பகுதியின் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 


இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. 



நீர்மட்டம் உயர்வு:


கடந்த 15-ந் தேதி 53 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம்  சட்டென உயர்ந்து இன்று 58.14 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 1,445 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 5 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.