மதுரை மாநகர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்கிற வெள்ளைகாளி. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வழக்குகள் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காணொளி காட்சி  மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி கே குருசாமி பெங்களூர் அருகே வைத்து 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். அப்போது வி.கே.குருசாமி காயங்களுடன் தப்பிய நிலையில் குருசாமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் ராஜபாண்டி - வி.கே.குருசாமி தரப்பு மோதலின் நீட்சி என தகவல் வெளியானது.


 

 





இந்நிலையில், பிரபல ரவுடியான வெள்ளைகாளியின் தாயார் ஜெயக்கொடி என்பவர் வீடியோ ஒன்றை சமூகவலைதளம் மூலமாக வெளியிட்டுள்ளார். அதில் வி.கே.குருசாமி கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடியான வெள்ளைகாளிக்கு தொடர்பு இருப்பதாக கூறி காவல்துறையினர் தொடர்ச்சியாக வெள்ளை காளியை துன்புறுத்திவருவதாகவும்,  அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் துன்புறுத்தி பொய் வழக்குகளின் கீழ் கைது செய்வதாகவும், மேலும் வி கே குருசாமி கொலை முயற்சி வழக்கில் தனது மகன் வெள்ளைக்காளியை பெங்களூருக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காவல்துறையினர் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டு முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. பிரபல ரவுடியான வெள்ளை காளி என்பவர் மதுரையில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ராஜபாண்டி - வீ.கே. குருசாமி தரப்பு மோதலில் ஏற்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்களில் ராஜபாண்டி தரப்பைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 

வெள்ளைக்காளியின் சகோதரரான சின்ன முனிஸ் என்பவரை வி.கே. குருசாமி தரப்பு கொலை செய்த போது அதற்கு பழி வாங்குவதற்காக வி.கே.குருசாமியின் குடும்பத்தினரை இரட்டைக் கொலை செய்த வழக்கில் வெள்ளைக்காளி கைது செய்யப்பட்டார். பின்பு பல்வேறு கொலை கஞ்சா கடத்தல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில் வெள்ளை காளியை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு குற்றாலத்தில் வைத்து கைது செய்தனர். பிரபல ரவுடி வெள்ளைக்காளி தற்போது கோவை மத்திய சிறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.