இந்திய அளவில் முதல் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகளைப் பதப்படுத்துவதில்  நவீன யுக்தி கண்டுபிடிப்பு 


உடல் உறுப்புகள் பதப்படுத்துதல்:


மருத்துவக் கல்வி படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் இறந்த நபர்களின்  மனித உறுப்புகள், புற்றுநோய் கட்டிகள், இறந்த சிசு உடல் ஆகியவற்றை பதப்படுத்தி வைத்திருப்பார்கள். பொதுவாக உடல் உறுப்புகளை பார்மலின் திரவம் நிரப்பப்பட்ட பாட்டில்களில் உடல் உறுப்புகளை பதப்படுத்தி வைக்கப்படும். இந்த முறையில் பதப்படுத்தி வைக்கப்படும் உடல் உறுப்புகள் சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.




பைபர் கிளாஸ் எம்பட்டிங்:


இந்த நிலையில் உடல் உறுப்புகளை பதப்படுத்தி வைக்கும் நவீன யுக்தியான பிளாஸ்டினேஷன் என்ற புதிய முறையில் உடல் உறுப்புக்கள், புற்றுநோய் கட்டிகள், மாறுபட்ட குறைபாடுடன் இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடல் ஆகியவற்றை பதப்படுத்தும் முறையை கடந்த 2012 முதல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறியியல் துணைத் தலைவர் எழிலரசன் செய்து வருகிறார். இந்த நிலையில் பிளாஸ்டினேஷன் முறையை மேம்படுத்தி இந்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்குறியியல் துறையில் பைபர் கிளாஸ் எம்பட்டிங் என்ற நவீன யுக்தியை கண்டுபிடித்துள்ளனர். 




இதற்கான அறிமுக நிகழ்ச்சி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் உடல் உறுப்புகளை பதப்படுத்துவதற்காக ஆரம்ப கட்டத்தில் ஃபார்மலின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையில் பதப்படுத்தப்படும் உறுப்புக்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அதன் வடிவம் மாறிவிடுகிறது.




மேலும் அந்த உறுப்புகள் வைக்கப்பட்ட அறை முழுவதும் ஒரு விதமான நெடி ஏற்படும். இந்த முறைக்கு மாற்றாக உடற்கூறியியல் துறை தலைவர் டாக்டர் எழிலரசன் பிளாஸ்டினேஷன் முறையை பின்பற்றி உடல் உறுப்புகளை பதப்படுத்தி வந்தார். இந்த நிலையில் உடல் உறுப்புகளை பதப்படுத்துவதில் இந்திய அளவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்முறையாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன யுக்தியை உடற்கூறியியல் துறை கண்டுபிடித்துள்ளது.




அதன்படி ஏற்கனவே பிளாஸ்டிக் நேசன் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை சுற்றி உருக்கப்பட்ட கண்ணாடிகளை ஊற்றி மோல்டு போல பதப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த முறையில் பதப்படுத்தப்படும் உடல் உறுப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை. வருங்கால மருத்துவ மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்க முடியும். இந்த பைபர் கிளாஸ் எம்பட்டிங் முறையில் உடல் உறுப்புகளை மட்டுமல்லாது முழு மனித உடலையும் பல ஆண்டுகளுக்கு பத்திரப்படுத்தி வைக்க முடியும். இந்த நவீன யுக்தி மருத்துவ படிப்பில் ஒரு புதிய சகாப்தமாக உள்ளது என்றார்.