தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கம்பம் பள்ளத்தாக்கு எனும் அழைக்கப்படும் கம்பத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சாமாண்டிபுரம் செல்லும் சாலை மார்க்கமாகவும் மற்றொரு வழிப்பாதையாக கம்பத்திலிருந்து மஞ்சக்குளம் வழியாக வயல்வெளிகள் சூழ வயல்வெளி பாதை மார்க்கமாகவும் என இரண்டு வழியாகவும் சாமாண்டி அம்மன் கோவிலுக்கு சென்று வரலாம்.




நான்கு பகுதிகளிலும் வயல்வெளிகள் சூழ்ந்து நடுவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது சாமாண்டி அம்மன் திருக்கோவில். வழக்கமாக அம்மன் கோவில்கள் வடக்கு பார்த்து தான் இருக்கும். ஆனால் இக்கோவில் அம்மன் தெற்கு நோக்கி இருப்பது மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள். இக்கோவிலுக்கு எதிரேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோயில் கொண்டுள்ள கண்ணகி வடக்கு நோக்கி இருப்பதால் இரு அம்மனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள அம்மனை விட கோவிலில் சுற்றியுள்ள புற்றுகள் விசேஷமானதாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது.




கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சாமாண்டி அம்மன் தங்கை முறையாம். கம்பராய பெருமாள் கோயில் தேர் இழுக்கும் போது ஒன்பது நாட்கள் சாமாண்டி அம்மன் அக்கோவிலுக்கு சென்று சீர் கேட்டதாகவும் சீர் குறைத்துக் கொடுத்ததால் கோவித்துக்கொண்டு சாமாண்டிபுரத்திற்கு அம்மன் சென்று விட்டதாகவும் அப்போதேருந்தே கோவில் உருவானதாகவும் கூறப்படுகிறது.




இக்கோவில் உருவாவதற்கு முன்பு முன்பொரு காலத்தில் வளையல்காரர் ஒருவர் வயல்வெளி வழியாக சென்று கொண்டிருந்தபோது  இந்த இடத்தில் இருக்கும் புற்றில் ஒரு பெண்ணின் கை மட்டுமே வெளியில் நீண்டதாகவும் அதைக் கண்ட வளையல்க்காரர் பயந்து நின்றிருந்த போது அய்யா என் கையில் வளையல் போடுங்கள் என்று அசரீரி ஒழித்ததாகவும், பயந்த வளையல்காரர் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் மீண்டும் அவ்வளையல்காரர் திரும்பி வந்தபோது அதேபோலவே கை நீண்டு தனக்கு வளையல் அணிவிக்கும் படி கேட்டது. வளையல் காரருக்கும் பயத்திலேயே கையில் வளையல் அணிவித்தார்.




பின்பு ஊருக்குள் வந்த வளையல்க்காரர் நடந்ததைக் கூறவே மக்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு பக்தர் வாயிலாக தோன்றிய சாமுண்டீஸ்வரி தானே புற்றில் குடியிருப்பதாக கூறியதாகவும், அன்றிலிருந்து இந்த இடத்தில் பக்தர்கள் கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாக வரலாறும் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவானது பங்குனியில் மூன்று நாட்கள் மற்றும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.




இத்தளத்தில் அம்பிகை புற்று வடிவில் அருள் பாலிக்கிறார் என்பதை இத்தளத்தில் வளையல் பிரசாதமாகவும் தரப்படுகிறது. இந்த கோவிலின் சுற்றுப்புற பிரகாரத்தில் விநாயகர், முருகன், கருப்பசாமி, ராக்காச்சி ஆகிய தெய்வங்களும் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் நிவர்த்தி பெற வேண்டி பெண்கள் இப்புற்றுக்கு அருகில் உள்ள மஞ்சரளி மரத்தில் தாலி தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அம்பிகைக்கு வஸ்திரம் அணிந்து சர்க்கரை பொங்கல் படைத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண