காவல்துறையினர் தாக்கியதில் இருவர் இறந்ததை கண்டித்து மதுரை, நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் உறுப்பினர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி கோரிய வழக்கில், சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று தினங்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 மார்ச் மாதம் மாணிக்கராஜ், முருகேசன் ஆகிய இருவரும் தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 30,31 ஆகிய இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
துணை காவல் கண்காணிப்பாளர் காவலில் வைத்து தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் 25 காவல்துறையினர் உட்பட தொடர்பு இருப்பதாக குறிப்பிடும் நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிபிசிஐடிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இது தொடர்பாக உரிய நிவாரணம் கோரி உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைை தெரிவிக்க அனுமதிக்க கோரி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே மதுரை, நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்ட நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் உறுப்பினர்கள் வீடுகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று தினங்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்