செய்தித்தாள், நூலகம், நூல் பதிப்பகம், யூடியூப் சேனல், சினிமா மையம் என திருநங்கைகளுக்கு தனி ஆவண மையம் ஒன்று மதுரையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்கள் என பலரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது திருநங்கைகள் முன்னேற்றத்திற்கான களஞ்சியமாகவும் செயல்படுகிறது.



இதுகுறித்து திருநங்கை ஆவண மைய இயக்குநர் பிரியா பாபுவிடம் பேசினோம். “ஒரு திருநங்கையாக நான் வாழ்க்கையில் எழுத்தாளராக துவங்கி ஆவணப்படங்கள், ஆல்பம், குறும்படங்கள் இயக்கியது, பல்வேறு புத்தகங்கள் எழுதியது, பயிற்சியாளராகவும் மோட்டிவேசன் ஸ்பீக்கராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரும் பெருமை. திருநங்கை சமூகத்திற்கும் இது மிகப்பெரும் அடையாளம்.



 

என்னைப் போல உள்ள திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரை அடுத்த கட்டத்திற்கு கைதூக்கிவிட பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறேன். என்னுடைய முயற்சியில் பல நண்பர்களும் கைகோர்த்து செயல்படுகின்றனர். இந்த பாதையின் முதல் படியாக 2016-ல் திருநங்கை ஆவண மையத்தை உருவாக்கினோம். இதன் மூலம் நசுக்கப்படும் மாற்றுப்பாலின நபர்களை மீட்க முயற்சிக்கிறோம். மாற்றுப்பாலின நபர்களுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது படிப்பை பாதியில் நிறுத்துதல். எனவே கல்வி கற்கும் சூழலை அதிகப்படுத்த வேண்டும், என உறுதி எடுத்து அதற்கான ஏற்பாடுகள் பலவற்றையும் செய்து வருகிறோம்.



 

நாடகம், ஸ்கில் ட்ரெயினிங், புத்தக வாசிப்பு, செய்திகள், நீதிமன்ற உத்தரவுகள்,  குறும்படம், ஆவணப்படம் என திருநங்கைகள்  தொடர்பான பெரும்பாலுமான ஆவணங்களை திரட்டி வைத்துள்ளோம். இதனால் பி.ஹெச்.டி, சோசியாலஜி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சினிமாக்காரர்கள் என அனைவருக்கும் இந்த மையம் பயன்படும். காட்சிக்கும், எழுத்திற்கும் மிகப்பெரும் வல்லமை உண்டு. அதன் மூலம் மாற்றுப்பாலின புரிதலை சமூகத்திற்கு கொண்டுவரமுடியும். மாற்றுப்பாலின மாணவர்கள், அனைத்து இடங்களிலும் படிப்பதற்கான சூழலை உருவாக்கவேண்டும்.



 

ஆசிரியர்கள் மாற்றுப்பாலின மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி படிக்க வைக்க வேண்டும். மாற்றுப்பாலின பாகுபாட்டை முற்றிலுமாக தவிர்த்து புரிதலை ஏற்படுத்த இந்த ஆவண மையம் செயல்படும். பல்வேறு திருநங்கைகள் ஆவணமையம் சார்பில் கல்லூரிகளுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். தற்போது சமூகத்தில் மாற்றுப்பாலின நபர்கள் சார்பாக நடத்தப்படும் விழாக்கள் வரவேற்கத்தக்கது. திருநங்கைகள் முன்னேற்றத்திற்காக ஆவண மையத்தை சிறப்பாக செயல்படுத்துவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.