தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார் என்பவர் (வயது35). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீனா தனது திருமணத்துக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த விக்ரம் என்ற சிவா (27) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. விக்ரம், கட்டுமான கூலித்தொழிலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மனைவியிடம் தகராறு:
திருமணத்துக்கு பிறகு, தனது மனைவியின் காதல் விவகாரம் ஜெகதீஸ்குமாருக்கு தெரியவந்தது. இதனால் மீனாவிடம், ஜெகதீஸ்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம் வீட்டுக்கு மீனா சென்றுள்ளார். தனது கணவருடன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் அவர் விக்ரமிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை விக்ரம் குடும்பத்தினர் கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே தனது மனைவி அவரது முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்றது ஜெகதீஸ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் விக்ரமை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து ஜெகதீஸ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு விக்ரம் வீட்டுக்கு சென்றுள்ளார். திறந்து கிடந்த பின்வாசல் வழியாக வீட்டிற்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த விக்ரமை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, விக்ரமின் மார்பு பகுதியில் சரமாரியாக ஜெகதீஸ்குமார் குத்தினார்.
குத்திக்கொலை:
விக்ரமின் அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரர் கவுதம் எழுந்தபோது அவரையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜெகதீஸ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த விக்ரம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுதம் கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தப்பி ஓடிய ஜெகதீஸ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விக்ரமின் உறவினர்கள், மாரியம்மன் கோவில்பட்டியில், போடி, தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்த ஜெகதீஸ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்