மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு. வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல். ஆர்.பி.உதயகுமார் தரப்பிற்கு நீதிபதிகள் எச்சரிக்கை.

 

நக்கீரர்  நுழைவாயிலை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு

 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே  போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மிகவும் பழமை  வாய்ந்த நக்கீரர்  நுழைவாயிலை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு. இதனை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது. தற்போதைய போக்குவரத்து நெரிநெரிசலால், அந்த பகுதியில் ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு, போக்குவரத்து அதிக நெரிசல் ஏற்படவும் காரணமாகிறது. ஆகவே மதுரை மாட்டுத்தாவணி  பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து. அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

ஆர்.பி.உதயகுமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல்

 

இந்த வழக்கு  மீண்டும் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த வழக்கில் மாட்டுத்தாவணி எதிரே உள்ள நக்கீரர் நுழைவாயில் உலக தமிழ்ச் சங்கம் நடைபெற்றதை, நினைவு கூறும் வகையில்  நினைவு சின்னமாக வைக்கப்பட்டது.  இதுபோல் மதுரையை சுற்றி உள்ள அனைத்து நுழைவாயில்களும் வரலாற்று நினைவு கூறு வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் அந்த தகவல் தெரியாமல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும். என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

கோபமடைந்த நீதிபதிகள்

 

அப்பொழுது கோபமடைந்த நீதிபதிகள் கடந்த 20 வருடங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக இந்த நுழைவாயில் உள்ளது. அதை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டால் மனுதாரர் இணையீட்டு மனு தாக்கல் செய்வது அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். தமிழே தெரியாமல் தமிழகத்தில் பலர் இருக்கக்கூடிய நிலையில் தமிழ்ச்சங்கம் நினைவாக நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது. என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அந்த நுழைவாயிலை மனுதாரர் பாதுகாக்க நினைத்தால் மாட்டுத்தாவணி எதிரே இருபுற சாலைகளிலும் உள்ள இடங்களை அவரது சொந்த பணத்தில் விலைக்கு வாங்கி அரசுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் மனுதாரர் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

 

புதிய பெரிதான நுழைவாயில் கட்டலாம்

 

ஆர்.பி.உதயகுமார் தரப்பில் திங்கள்கிழமை ஒத்தி வைத்தால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். அப்போது எச்சரிக்கை செய்த நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். மேலும் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கையும் செய்தனர். மேலும் மதுரையில் போக்குவரத்து மிகுந்த நெரிசலில் உள்ள கே.கே நகர் “பெரியார் நுழைவாயில்” மற்றும் மாட்டுத்தாவணி “நக்கீரர் நுழைவாயில்” ஆகிய இரண்டையும் இடித்துவிட்டு அதே பெயரில் புதிய பெரிதான நுழைவாயில் கட்டலாம் என தெரிவித்து வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.