தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மங்கல தேவி கண்ணகி கோவில் சித்ராபவுர்ணமி திருவிழா நடத்துவது தொடர்பான முதல் ஆலோசனை கூட்டம்  உத்தமபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.




தேனி மாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் மங்கல தேவி கண்ணகி கோவில் உள்ளது. இதற்காக லோயர் கேம்ப் பளியங்குடியில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும் அல்லது கேரள மாநிலம் குமுளியில் இருந்து தேக்கடி, கொக்கரக்கண்டம் உள்ளிட்ட பெரியார் புலிகள் காப்பக வனப்பாதை வழியாக ஜீப்பில் சுமார் 16 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். ‌




ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று தமிழக - கேரள பக்தர்கள் இணைந்து கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா  நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி சித்ரா பௌர்ணமியன்று கண்ணகி கோவில் திருவிழா நடத்துவது குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக்கூட்டம் உத்தமபாளையம் கோட்டாட்சியர் தாட்சியாணி தலைமையில் நடைபெற்றது. உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கண்ணகி கோவில் அறக்கட்டளையினர்,  உத்தமபாளையம்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வனம், காவல், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டனர்.




கூட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவதில் கேரள வனத்துறை மற்றும் அம்மாநில அதிகாரிகளின் கெடுபிடிகள் குறித்து எடுத்துரைத்து, இந்த ஆண்டு திருவிழாவில் அவை களையப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கடந்த ஆண்டுகளில் எந்த மாதிரியான நடைமுறைகள் கண்ணகி கோவிலில் பின்பற்றப்பட்டது என்பது குறித்தும் இந்த ஆண்டு எவ்வாறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்தும் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.




முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் முடிவு பெற்றுள்ளது. திருவிழா நடைபெறுவதற்கு உள்ளாக தொடர்ந்து மாவட்ட அளவிலான கண்ணகி கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும்  வாரத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து  இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான இரு மாநில அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி நடத்தப்படும். இந்த கூட்டங்களில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது குறித்து தொடர்ந்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு கண்ணகி கோவில் திருவிழா சுமுகமாகவும் பக்தர்களின் சிறப்பான தரிசனத்திற்காக அமைதியான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.