தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிப்பிற்கு மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழு உருவாக்கியது.‌ அதில் தமிழகம் மற்றும் கேரள மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.




தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸ் ஆகிய மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.‌ இந்த கண்காணிப்பு குழுவினர் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதியன்று அணையில் ஆய்வு செய்தனர்.


இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் காவேரி தொழில் நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரணியம், கேரளா சார்பில் நீர்ப்பாசனத் துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகிய இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.




இந்த ஐந்து பேர் கொண்ட கண்காணிப்பு குழு இன்று மே 9-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இதற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து தமிழக அரசுக்கு சொந்தமான கண்ணகி படகில் அணைக்கு பயணம் செய்தனர்.‌ கேரளப் பிரதிநிதிகள் அம்மாநிலத்திற்கு சொந்தமான படகில் சென்றனர். இதில் பிரதான அணை, பேபி அணை, மதகுப்பகுதிகள், சுரங்கப்பகுதிகள் ஆகியனவற்றை குழு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மதகுகளின் இயக்கி அதன் தன்மையை சரிபார்த்தும், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் அளவை சரிபார்த்தனர்.




அதோடு தற்போது நிலவும் கோடை காலம் மற்றும் எதிர் வரும் தென் மேற்குப் பருவமழை காலங்களில் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.  முல்லைப் பெரியாறு அணையில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்ற பிறகு நடைபெறும் முதல் ஆய்வு மற்றும் 15மாதங்களுக்கு பின் நடைபெறும் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு என்பதாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆய்வில் கண்காணிப்பு குழுவினருடன் தமிழகம் மற்றும் கேரள மாநில பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண