மேற்கு தொடர்ச்சி மலையடிவார மாவட்டமான தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடிக்கிறது. பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மல்லிகைப்பூக்களின் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பூக்களின் பனிப்பொழிவால் மொட்டுக்கள் செடியிலேயே கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக தமிழக, கேரள எல்லை இரு மாநிலத்தை இணைக்கும் எல்லை மாவட்டமாகவும் தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, கட்டப்பனை, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி , கம்பம், சீலையம்பட்டி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் தற்போது பூக்கள் வரத்து குறைவாலும் ஐயப்பன் கோவில் சீசன், வளர்பிறை கடைசி முகூர்த்தம் மற்றும் கார்த்திகை தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதில் தேனி, ஆண்டிபட்டி மலர் சந்தையில் குறிப்பாக மல்லிகை பூ வின் விலை இன்று கிலோவிற்கு 5 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகிறது.
மேலும் விளைச்சல் குறைந்ததால் ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ வரத்து அடியோடு குறைந்துள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் கிலோ என்ற அளவில் இருந்த மல்லிகைப்பூக்களின் வரத்து, தற்போது 10 கிலோவாக குறைந்துவிட்டது. இதன்காரணமாக மல்லிகைப்பூவின் விலை சட்டென உயர்ந்துள்ளது. ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.4 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டதும் இன்று கிலோவிற்கு 5 ஆயிரம் ருபாய் வரையில் விற்பனைவாதும், முகூர்த்த நாள் வர உள்ள நிலையில் மல்லிகைப்பூ விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகைப்பூவை போல பிச்சி மற்றும் முல்லைப்பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மல்லிகை பூவின் விலை கிலோவிற்கு 5 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகிறது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மல்லி விலை 3000 - 3500 ரூ, பிச்சிப்பூ - 1500 ரூ, முல்லை - 1500 ரூ, சம்மங்கி - 300 ரூ, செண்டு மல்லி - 80 , பட்டன் ரோஸ் - 250 ரூ வரையில் விற்பனையாகி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்