தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  ஒரு ஷோரூமில் ape bs6 சென்சார் மாடல் ஆட்டோ வாங்கியுள்ளார். பொம்மனகவுண்டன்பட்டி பாலா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி  தேனி பெரியகுளம் சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகாமையில் பின்பக்கம் புகை வந்துள்ளது, உடனடியாக இறங்கி பார்த்தபோது திடீரென தீப்பற்றி ஆட்டோ முழுவதும் தீ  பரவி எரிந்துள்ளது.




ஆட்டோ முழுவதும் எரிந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் தான் ஆட்டோ வாங்கிய ஷோரூமில் அணுகி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் இழப்பீடு தொகை கேட்டு தற்போது வரை அலைந்து உள்ளார். இன்சூரன்ஸ் தொகை தற்போது வரை கிடைக்காமலும் சம்பந்தப்பட்ட  ஆட்டோ விற்பனை நிலையம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அணுகியபோது ஊழியர்கள் கண்ணனை தரக்குறைவாக பேசியதாகவும் தற்போது வரை தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலும் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனங்களும் அடாவடியாக இரண்டு மாத வசூல் செய்து தற்போது மூன்றாவது தவணையை கட்ட சொல்லி தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.  




இரண்டு மாதமாக ஆட்டோ ஓட்ட முடியாமல் வேற தொழிலுக்கு செல்ல முடியாமலும் வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த கண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு வழங்க வந்துள்ளார்.  மனு வழங்க வந்த இடத்தில் தனக்கு தலை சுற்றுவதாக அருகாமையில் இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். என்ன பிரச்சனை என்று காவல்துறையினர் கேட்ட பொழுது கண்ணன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி வந்துள்ளதாகவும் ஆட்டோ எரிந்த நிலையில் தனக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும் வருமானம் இன்றியும் மன உளைச்சலில் இருந்த நிலையில் தன்னை தகாத வார்த்தையில் பேசிய  சம்பந்தப்பட்ட ஆட்டோ நிறுவனம் இன்சூரன்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த பூச்சிக்கொல்லி மருந்தினை உட்கொண்டு வந்ததாக தெரிவித்தார்.




அதிர்ந்து போன செய்தியாளர்களும் காவல்துறையினரும் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தேனி கா.விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆட்டோ எரிந்த நிலையில் தனக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலையிலும் வறுமையிலும் மன உளைச்சலில் இருந்து வந்த கண்ணன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க வந்த நிகழ்வு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை உட்கொண்டு மனு வழங்க வந்ததாக கண்ணன் தெரிவித்துள்ளார்.