தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட திமுக சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தின் போது பார்வையாளராக  நின்றுகொண்டிருந்தவர் மீது மாடு முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. திமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக குரங்கணி சாலையில் உள்ள இரட்டை வாய்க்கால் அருகே  நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை  தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். 




200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை பார்ப்பதற்கு போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திரளாக கூடியிருந்தனர். பந்தயத்தில் மாடுகள் சாலைகளில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு ஓடின அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த போடி புதூரை சேர்ந்த ராமு (40) என்ற தொழிலாளியை பந்தயத்தில் ஓடி கொண்டிருந்த மாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.




 


இதை அடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போடி நகர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதியின்றி மாட்டுவண்டிபந்தயம் நடத்தியது தெரிய வந்தது.  இதையடுத்து  சட்டவிரோதமாக ஒன்று கூடி ரோட்டை மறித்து போக்குவரத்து இடையூறு செய்தது, வண்டி பந்தயம் நடத்தியது, கவனக்குறைவாக மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக கம்பம் தேரடி தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கம்பம் புதுப்பட்டி சேர்ந்த மகேஸ்வரன், வாய்க்கால் பட்டியை சேர்ந்த பாரத் மற்றும் திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாடு முட்டி உயிரிழந்த ராமருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாட்டுவண்டி பந்தயத்தை வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண