தமிழக-கேரள எல்லை மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. இரு மாநில எல்லைபகுதியாக கம்பமெட்டு , போடிமெட்டு, குமுளி வழிச்சாலை என இரு மாநில மக்களும் போக்குவரத்துக்கு ஏதுவாக உள்ளது . கேரளாவில் அதிகமாக விளையும் நறுமனப்பொருட்களான ஏலக்காய், மிளகு, தேயிலை போன்றவைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளையும் தோட்ட பயிர்களுக்கு தோட்ட வேலைகளுக்கு அதிகளவில் தமிழகத்திலிருந்தே வேலையாட்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, கூடலூர், தேவாரம் உள்ளிட்ட மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமாக வேலையாட்கள் குறிப்பாக பெண்கள் சென்று வருகின்றனர்.




கேரளாவை சேர்ந்தவர்களும் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் குறிப்பாக உணவுப் பொருட்களான காய்கறிகள், அரிசி போன்றவைகளை வாங்குவதற்கும் வர்த்தக மற்றும் வணிக ரீதியாக கேரளாவை சேர்ந்தவர்கள் தேனி மாவட்டத்திற்கு அதிகளவில் வருவதுண்டு. தமிழகத்திலிருந்து கேரளா தோட்ட வேலைகளுக்கு செல்பவர்கள் அதிகளவில் ஜீப் , க்ருய்சர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் ஜீப்கள் போன்ற ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதே போல வாகனங்கள் நிறுத்துமிடமும் உள்ளது.




இந்த நிலையில் கம்பம் நந்தகோபாலன் தெருவில், தண்ணீர் தொட்டி தெருவில் வாகன நிறுத்தம் உள்ளது. இந்த வாகன நிறுத்தத்தில் கேரளாவிற்கு வேலையாட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாகனங்களை காப்பகத்தில் நிறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வாகனம் ஒன்று தீப்பற்றி எறியத்தொடங்கியது. இதனை பார்த்த வாகன காப்பக காவலாளி உடனடியாக சென்று காப்பகத்தின் மின் இணைப்புகளை துண்டித்துள்ளார். செய்வதறியாது நின்ற காவலாளி கம்பம் தீயணைப்புத்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளார்.




தீயணைப்பு வாகனம் வருவதற்குள் ஒரு ஜீப்பில் பற்றிய தீ அடுத்தடுத்த வாகனத்தில் தீ பற்றி பரவியுள்ளது. சிறிது நேரத்தில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த வாகனத்தில் தீ பரவியது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பிலான ஜீப்கள் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லும் க்ருய்சர் போன்ற 12 வாகனங்கள் தீயில் கருகி சேதமாகியது.




சம்பவம் அறிந்து வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீ பற்றி எறிந்த வாகனங்கள் அனைத்தும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் வாகனங்களுக்கு முழுக்காப்பீடு செய்யாமல் இருப்பதும் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே செய்துள்ளதால் சேதம் அடைந்த வாகங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலை உள்ளதால் சேதமடைந்த வாகன உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண