புள்ளிக்கோலம், ரங்கோலி போன்றவற்றை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஆசிரியர் அமிர்தா. ஓவியத்தை விஞ்சிவிடுகிற நேர்த்தியுடன் கோலம் வரைவது பலரையும் ஆச்சிரியத்தில் உறைய வைக்கிறது. விசேஷ நாட்களில் கோலம் போடவே பலரும் அலுத்துக்கொள்வதை கண்டு இருப்போம் . ஆனால், 32 ஆண்டுகளாக விதம் விதமாகக் கோலம் வரைந்துவருகிறார் அமிர்தா. இவர் கோலத்தில் கூடக் கண்ணைக் கவரும் உருவங்களை உருவாக்கி ஒளியின் ஜாலங்களைப் பிரதிபலிக்கவும் முப்பரிமாண முறையில் அசத்தவும் முடியும் என்று நிரூபித்துவருகிறார். இவர்  உருவக் கோலங்களை ரசிக்காதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை . தினமும் இவரது வீட்டைக் கடந்து செல்பவர்கள் இவர் வரைந்திருக்கும் கோலத்தைச் சில நொடிகளாவது ரசித்துவிட்டே கடக்கின்றனர்.



பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் அமிர்தா, வண்ணப் பொடிகளில் கண்கவரும் கோலங்கள் வரைவதில் கைதேர்ந்தவராக  இருக்கிறார். இவர் மதுரையில் கல்லுாரி படிப்பை முடித்த பின் எம்.எஸ்சி., எம்.பில்., இயற்பியல், எம்.ஏ., தத்துவயியல் முடித்து உள்ளார் . ஆசிரியையாக 19 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம் வரைய தீராத ஆசை இருந்து உள்ளது. மேலும், இவரின் உறவினர்கள் வரை கலையில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், இவருக்கும் அந்த பழக்கம் தொற்றிக்கொண்டது.



தேனியில் கடந்த ஆறு ஆண்டாக தை முதல் தேதியில் 14 மணிநேரம், 12 அடி நீளமுள்ள சுவாமி உருவங்களை தத்ரூபமாக வண்ணக் கோலப்பொடிகளை கொண்டு வரைந்து வருகிறார். தேனியில் கோலப்போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களை கவுரவிப்பது வழக்கம். நகர் முழுவதும் ஆங்காங்கே போட்டி நடந்தால், நடுவர்கள் வாகனங்களை எடுத்து வந்து கோலங்களை தேர்வுசெய்த காலமும் உண்டு. ஆனால், அந்நிலை தற்போது இல்லை. தொழில் நுட்பம் பெருகியதால் 'வாட்ஸ் ஆப், முக நூலில் கோலங்களை பார்த்து ரசிக்கிறார்கள். இவர் தயாரித்த 960 வண்ணங்களில் உள்ள கோலப் பொடிகள்  மண் மட்டும்தான், வண்ண கோலங்கள் வசீகரிக்க வைக்கின்றன. மேலும், வண்ணங்களுக்காக பல ஊர்களுக்கும் சென்று பலநிற மண்ணைச் சேகரித்து வருகிறார்.



பெரும்பாலும் பெண்கள் கோலப்பொடி தயாரிக்கும்போது , மணலை சல்லிப்பது கிடையாது. ஆனால், அதனை சல்லித்து பல்வேறு மெதுநிற மணல் மற்றும் மண்களை கொண்டு பல வண்ணங்களை உருவாக்கியதன் விளைவாக இவரிடம்  960 வண்ணக் கோலப்பொடிகள் உள்ளன. மேலும் இதற்காக பல ஊர்களுக்கும் சென்று பலநிற மண்ணைச் சேகரித்து வருகிறார். மேலும், முகநூலில் தனது உறவினர்களுக்கு தினமும் 'பென்சில்' ஓவியம், ஆயில் பெயின்டிங். சாப்ட் பேஸ்டல், வாட்டர் கலர் உள்ளிட்டவற்றை கொண்டு  குறுஞ்செய்திகளாக வரைந்து அனுப்புவதையும் கடைபிடித்து வருகிறார்.




இது குறித்து ஆசிரியர் அமிர்தா கூறுகையில், "எங்கள் குடும்பத்தில் பலருக்கும் கலையார்வமும் ரசனையும் அதிகம். இதனால், எனக்கும் இயல்பாகவே கோலம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. மற்றவர்களைப்போல் இல்லாமல் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காகக் கோலங்களில் உருவங்களை வரையத் தொடங்கினேன். மண்ணின்தன்மை நூற்றுக்கணக்கான வண்ணங்களை உருவாக்குகிறது. இதற்காக தூத்துக்குடி, திருச்செந்தூர், உவரி, முயல்தீவு, ராமேஸ்வரம் என்று கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று மண்ணைச் சேகரிப்பேன். பார்க்க ஒரே வண்ணம் போலத் தெரிந்தாலும் அதில் நுணுக்கமான வேறுபாடு இருக்கும், புத்தர், கங்கைகொண்ட சோழபுரம், ராதை, கோழிக் குஞ்சுகள், ஆண்டாள், முப்பரிமாண வண்ணத்துப்பூச்சி என்று ஏராளமான உருவங்களைக் கோலத்தில் உருவாக்கி இருக்கிறேன். கோலங்கள் வரையும்போது யோகா செய்வதற்கான நிம்மதி கிடைக்கிறது என்றும், தினமும் 2 மணிநேரம் குறைந்தது செலவிடுகிறேன்” என்றார்



”இயற்கைக் காட்சிகளைக் கோலமாக வரைந்து வருகிறேன். சில கோலங்களை வரைய 16 மணிநேரம் கூட ஆகும். கோலத்தை வரைந்து முடிக்கும் வரை யாருடனும் பேச மாட்டேன் தண்ணீர்கூடக் குடிக்க மாட்டேன்” என்கிறார்.