சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13- ஆம் தேதி துவங்கியது. கொரோனா முழு ஊரடங்கிற்கு பின்பு அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் துவங்கி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5-ஆம் மற்றும் 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 7-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள், மண் பானை, வட்டில் மூடிகள் , சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை, அகண்ட வாய் கிண்ணம், பகடைகாய்,உழவுவிற்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, சூது பவள மணிகள் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல் தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இதுவரை ஏற்கனவே 2 முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள் மற்றும் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டறியபட்டுள்ள நிலையில். மேலும் ஒரு முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டது. அதே போல் கீழடியில் 44 செ.மீ உயரமுள்ள சுடு மண் வட்டை போன்ற அமைப்பு ஒன்று வெளிப்புறத்தில் 2 கயிறு போன்ற வடிவமைப்பு ஒன்று அகழ்ந்து எடுக்கப்படுகிறது.
மதுரையின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - TN Corona Update: மதுரையில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு; சிவகங்கையில் 45 பேர் பாதிப்பு!
இந்நிலையில் அகரம் பகுதியில் தோண்டப்படும் 7 குழிகளில், ஒரு குழியில் முதன் முதலாக சுடுமண் உறை கிணறு போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு மட்டும் தென்பட்ட நிலையில் ஒரு அடுக்கு சிதிலமடைந்துள்ளது. 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள இந்த உறைகிணற்றின் தொடர்ச்சியாக கண்டறியும் பணி நடைபெறுகிறது. 6-ம் கட்ட அகழாய்வில் 6 உறை கிணறு கண்டறியப்பட்ட நிலையில் 7-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக உறை கிணறு போன்ற அமைப்பு தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழடி 7-ம் கட்ட அகழாய்வு புகைப்பட தொகுப்பு பார்க்க இங்கே கிளிக் செய்யவும் -keezhadi photos: கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணியின் புகைப்படங்கள் !