மதுரை போடிநாயக்கனூர் 90 கிமீ அகல ரயில் பாதைத் திட்டத்தில் ஏற்கனவே மதுரை - தேனி இடையே பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து  நடைபெற்று வருகிறது. தேனி - போடிநாயக்கனூர் இடையேயான 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த புதிய அகல ரயில் பாதையில் பல்வேறு ரயில் சோதனை ஓட்டங்கள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.



இந்த புதிய அகல ரயில் பாதையை பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் வியாழக்கிழமை (29.12.22) அன்று சட்டப்பூர்வ ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த ஆய்வு முதலில் காலை 10.00 மணி முதல்  தேனியில் துவங்கி மதியம் 01.00 மணி வரை மோட்டார் டிராலி மூலம் நடத்தப்பட இருக்கிறது. பின்பு மதியம் 01.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை  போடிநாயக்கனூர் - தேனி இடையே மூன்று ரயில் பெட்டிகளுடன் மணிக்கு 120 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.



அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள்,  புதிய அகல ரயில் பாதை அருகே வசிப்போர் ஆகியோர் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி. கே. குப்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதன்மை பொறியாளர் இளம் பூரணன் துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.