எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும், தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாத்து, முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கட்சி டிச.24 - 27 வரை நடைபெற்ற நடைபயணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இப்போராட்டத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் 200க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி., "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் இருப்பதற்கு நிர்வாக ரீதியான காரணத்தை ஒன்றிய அரசு சொல்கிறது. உண்மையில், தமிழகத்தை பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை அரசியல் காரணத்தால் தான் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளித்துவிட்டதாக ஒன்றிய அரசு சொல்லும் கதையை கேட்டு கேட்டு புளித்துப்போய் விட்டது. நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு பணி ஏன் இன்னும் திவங்கப்படவில்லை? இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்பட வேண்டும்.



 

மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விவகாரத்திலும் ஒன்றிய பாஜக அரசு  மதுரையை வஞ்சித்து வருகிறது. விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்காமல் இருப்பதற்கு தொழில் பாதுகாப்பு படைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொன்னவர்கள், இப்போது இரவில் விமானம் வரவில்லை என்று சொல்கிறார்கள். மாற்றி மாற்றி காரணத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விமான நிலைய ஒடுதள விரிவாக்க பணிகளுக்கான 97% நிலம் ஒன்றிய விமான போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இரண்டு குளங்களை மட்டும் வகைமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. நிலம் ஒப்படைகப்பட்டும் பணிகளை துவங்காமல் காரணத்தை மட்டுமே சொல்கிறார்கள்" என்றார்.