அமைச்சர் உதயநிதி மதுரையில்


தி.மு.க., கூட்டணியில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில் " 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒத்த செங்கலையும் நான் எடுத்துச் சென்று விட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் தான் ஒத்த செங்கலை நான் திருப்பித் தருவேன்.


தமிழ்நாட்டிற்கு பின்னால் அறிவிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மாநில உரிமைகளை மீட்டெடுக்கவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம். ஏன் மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க., அடிமைகளின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளை அடகு வைத்து விட்டனர்.


எட்டிப்பார்க்காத மோடி


  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி எட்டிக்கூட பார்க்கவில்லை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 37,000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய பிரதமரிடம் 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என கூறினார். 


ஆனால் ஒன்றிய நிதி அமைச்சர் நக்கலாக, திமிறாக நாங்கள் என்ன ஏ.டி.எம்., மிஷின் என்ன கருத்து கூறினார். அதற்கு உங்களின் தந்தை பணத்தைக் கேட்கவில்லை ஒன்றிய அரசிற்கு நாங்கள் செலுத்திய வரிப்பணத்தை கேட்கிறோம் என கூறினேன்.அதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை என கூறினார். நானும் வருத்தம் தெரிவித்தேன். அவர்களுக்கு மரியாதையும் கொடுத்தேன் ஆனால் நாங்கள் கேட்ட நிதியை ஒன்றிய அரசு கொடுத்ததா?, மழை வெள்ள பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடமிருந்து ஒரு ரூபாய் கூட நிதி வரவில்லை.


ஒரு ரூபாய்க்கு 28 பைசா


தமிழ்நாடு அரசின் சார்பில் 5 ஆண்டுகளில் ஆறரை லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளது, ஒன்றிய அரசு மாநில அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பி தந்துள்ளது. ஒன்றிய அரசின் சார்பில் ஒரு ரூபாய்க்கு 28 பைசா மட்டுமே திருப்பித் தரப்படுகிறது. மோடிக்கு மிஸ்டர் 28 பைசா என தமிழக மக்கள் செல்ல பெயர் வைக்க வேண்டும். நீட் தேர்வு எழுதினால் தமிழகத்தில் 28 மாணவ - மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.  ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு ஒன்றிய அரசின் அழுத்தத்தின் காரணமாக அ.தி.மு.க., நீட் தேர்வை தமிழகத்திற்குள் கொண்டு வந்தது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு நீட் தேர்தலிருந்து விலக்கு அளிக்கப்படும். தேர்தலுக்காக பிரதமர் மோடி சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளார்.


இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். கொரோனா பரவல் காலகட்டத்தில் பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கொரோனா வார்டுக்குள் சென்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.  மூன்று ஆண்டுகளில் 486 கோடி மகளிர் இலவச பேருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என் குழந்தை பார்த்துக் கொள்வதற்கு முதலமைச்சர் இருக்கிறார் என்னை நினைத்து பெற்றோர்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள். தமிழகத்தில் தகுதியுள்ள அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது என்னுடைய பொறுப்பு. கலைஞர் 101 வது பிறந்தநாளில் 40  தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும்" எனப் பேசினார்.