கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தில் இருந்து இறைச்சி, முட்டை உள்ளிட்டவைகளை தேனி மாவட்டத்திற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் இறைச்சி கொண்டு வர தடை


அண்டை மாநிலமான கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் டெத்வா மற்றும் செருதானா கிராமங்களில் சில கோழிப்பண்ணைகளில் வாத்துக்கள் அடிக்கடி இறந்த நிலையில் அதனை ஆய்வு மேற்கொண்டதில் எச்.5.என்.1 என்ற பறவைக் காய்ச்சல் நச்சுயிரி பாதித்து இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது அங்கு நோய் பரவல் இல்லை. எனினும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 




தமிழ்நாட்டில் அறிகுறி ஏதுமில்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தின் கேரள மாநில எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய மூன்று இடங்களில் கடந்த ஆண்டு போலவே மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்போடு, கால்நடைபராமரிப்புத்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமிநாசினி மருந்துதெளிப்பவர் அடங்கிய குழுக்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழக ,கேரள எல்லையில் தீவிர சோதனை


போடி மெட்டு சோதனைசாவடி நிர்வாக வசதிக்காவும், சிறந்த முறையில் தொழில் நுட்பபணிகள் மேற்கொள்ளவும் முந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. போடி மெட்டிலுள்ள காவல் சோதனை சாவடியில் இது குறித்து விளக்கப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று சோதனைசாவடிகளிலும் கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டு, சோதனையிடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறது. 




கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பறவை சார்ந்த பொருட்களுக்கு தடை


கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள், வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டுவரப்படும் வாகனங்கள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பப்படுகிறது.  மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பான கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பறவை காய்ச்சல் அறிகுறி என்ன ?


கோழிகளில் பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் :  தீவனம் உண்ணாமல் சோர்வுடன் இருத்தல், தலைவீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், முட்டை உற்பத்தி திடீர் குறைவு, கோழிகள் இறப்பு, இறந்தகோழிகளில் உடல் உறுப்புகளில் இரத்த கசிவு ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் மற்றும் அதிக அளவு இறப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.




கோழிக்கறி மற்றும் கோழி முட்டை சாப்பிடுவது பற்றிய அறிவுரைகள்,


தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் நோய் இல்லை. எனவே, நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை தைரியமாக சாப்பிடலாம். ஒருவேளை நாம் வாங்கும் இறைச்சியில் நோய்க்கிருமி இருந்தாலும், சமைக்கும் போது 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைரஸ் நச்சுயிரி அழிந்துவிடும். அரைவேக்காட்டில் சமைத்த கறி மற்றும் முட்டைகளை உண்ணக்கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது பொறித்த ஆம்லெட்  உண்ணலாம்.


அச்சமடைய வேண்டாம். ஆனால், விழிப்போடு இருங்கள்


இந்நோய் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை.நோய் வராமல் தடுக்கும் முறைகள் இந்நோய் உங்களையும், உங்கள் கோழிகளையும் தாக்காமல் இருக்க கீழ்காணும் சுகாதார முறைகளை கண்டிப்புடன் கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நீங்கள் வளர்க்கும் கோழிகள் உங்கள் வீட்டு எல்லையைத் தாண்டி வெளியில் சென்று மேய்ந்து வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.உங்கள் கோழிகளின் தீவனம் மற்றும் தண்ணீர் வேறுகோழிகள் அல்லது பறவைகள் பங்கிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டைச்சுற்றிலும்  சுவர்  அல்லது முள்வேலி அமைத்துக் கொள்வது நல்லது.கோழி, வாத்து, வான்கோழி, கூஸ் வாத்து போன்று பல்வேறு இனப்பறவைகளை ஒன்றாக வளர்க்காமல் கவனமாக தனித்தனியாக வளரும்படி பார்த்த்க்கொள்ள வேண்டும். கோழிக் கூண்டு சுத்தம் செய்யும் போது முகக்கவசம் அல்லது துணிகட்டி நாசிகளையும் வாயையும் மூடிக்கொண்ட பிறகு சுத்தம் செய்ய வேண்டும்.. சுத்தம் செய்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். கோழி மற்றும் கோழி இறைச்சியைக் கையாளும் போதும், பின்பும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.