சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்ரமணி- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 8-ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தையின்று தவித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் மருத்துவர் ஆலோசனைப்படி (ஐ.சி.எஸ்.ஐ) எனும் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சன்’ (Intracytoplasmic sperm injection - ICSI) என்னும்  ‘ஓரணு ஒரு கருமுட்டை செயற்கைச் சேர்க்கை’ முறைதான் இது.



இந்நிலையில் ஸ்கேன் மூலம் மீனாட்சிக்கு இரட்டை குழந்தை உண்டாகி இருப்பது தெரிய வந்தது. மேலும் கர்ப்பமாக இருந்த மீனாட்சி இரத்த அழுத்தம் மற்றும் தைராடு  குறைபாடு நோய்க்காகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது வாரம் கர்ப்ப காலத்தின் போது இவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமையில்

மகளிர் நோய் பிரிவு துறை தலைவர்  காயத்ரி, குழந்தைகள் பிரிவு துறை தலைவர்  குணா, பொதுமருத்துவ துறைத் தலைவர்  பீர் முஹம்மது, மயக்கவியல் துறைத்தலைவர்  வைரவராஜன் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து அனைவரின்  ஆலோசனையின் படி உடனடியாக ரெம்டெசிவர்,  டெக்ஸாமெத்தாசன் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் நெஞ்சக பகுதிக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் 30% நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டது. நோயாளி தனிமை படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பகுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டு நேற்று முந்தினம்  23-ம் தேதி குழந்தை பிறந்தது. முதல் குழந்தை தலை திரும்பாமல் இருந்ததாலும், நீண்ட கால குழந்தையின்மை காரணமாகவும் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு குழந்தைகளும் நலமுடன் பிரசவிக்கபட்டன.  முதலாம் ஆண் குழந்தை 2.2 கிலோ எடையுடனும் இரண்டாம் பெண் குழந்தை 2 கிலோ எடையுடன் நலமாக உள்ளன. அதிகப் படியான ரத்தக்கசிவு இருந்ததால் கர்ப்பப்பை மற்றும் இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டன.  தொடர்ந்து பல்வேறு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மருத்துவ குழுவினருக்கு நோயாளியின் உறவினர்கள் நெகிழ்ச்சிபட நன்றிகளை தெரிவித்தனர்.

 

 ”கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு எந்த பிரச்னையும் இன்றி இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்கு உதவிய மருத்துவ குழுவிற்கு நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக” சிவகங்கை மருத்துவமனை  முதல்வர் ரேவதி  நம்மிடம் கூறினார்.