தொழில் வாய்ப்புகள் குறைந்த மாவட்டம், வறட்சியான மாவட்டம் என விமர்சிக்கப்படும் சிவகங்கையில் தான் அதிகளவு குளங்கள், கண்மாய்கள், ஏந்தல்கள் என நீர்நிலைகள் அதிகளவு உருவாக்கப்பட்டு, வானம் பார்த்த பூமியிலும் வெற்றிகரமாக விவசாயம் செய்து வந்துள்ளனர். சிவகங்கையில் தற்போது தொழில் வாய்ப்புகள் இல்லாமல் பலரும் வெளிநாட்டு வேலையையே அதிகளவு நம்பி இருக்கின்றனர்.



 

 

ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் நறுமண பூங்கா, கதர் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு முக்கியம் வாய்ந்த அரசு சார்ந்த நிறுவனங்கள்  பல கோடிக்கு கட்டப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, என்ற தகவல் தான் கசப்பான உண்மை.  காரைக்குடி அடுத்த கண்டனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டிநாடு பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், கண்டனூரில்  தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் நலவாரியம் சார்பில் கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு முன் தொழில் மையம் அமைக்கப்பட்டது.



இதற்காக தனக்கு சொந்தமான சுமார் 27 ஏக்கர் நிலத்தை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு தானமாக கொடுத்தார்.  கதர் கிராமத் தொழில் மையத்தில் தச்சுத் தொழில், நூற்பு ஆலை, சோப்பு, காலணி தயாரிப்பு, நவீன தறி உள்ளிட்ட தொழில்கள் தொடங்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. மேலும் காகிதம் தயாரிக்க இயந்திரங்களும் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் இந்த மையத்தில் தொழில்கள் துவங்கப்படவில்லை.  இதனால் கட்டடங்கள் வீணாக கிடந்தது. அதன் பின்னர் அந்த கட்டிடங்கள் மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்துக்கு உட்பட்ட காரைக்குடி சர்வதேச சங்கத்துக்கு வாடகைக்கு விடப்பட்டன. அச்சங்கம் சார்பில் பீரோ, கட்டில், சோப்பு, காலணி, ஹாலோ பிளாக் கல், தச்சு தொழில்கள் போன்றவை நடந்து வந்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்தனர். அதன்பிறகு கண்டனூர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் மையக் கட்டிடங்கள் பயன்பாடின்றி மூடிக் கிடக்கின்றன.  பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போதுவரை பயனின்றி கிடக்கிறது. கடந்த ஆட்சியில் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக சிவகங்கை எம்.எல்.ஏ ஜி.பாஸ்கரன் பொறுப்பேற்றார்.

 



இது குறித்து பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தும் பெரிய அளவு மாற்றங்களை அவர் உருவாக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருப்பத்தூர் பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது கண்டனூரை சேர்ந்த பெண் ஒருவர். கண்டனூர் காதி நிறுவனத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரின் மனுவை படித்த பின்னர் கண்டிப்பாக ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கைகள் எடுக்கிறேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கதர் கிராம தொழில் வாரிய ஆணையர் சங்கர் ஐ.ஏ.எஸ் க்கு இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டது.



 

இதனைத் தொடர்ந்து கதர் கிராம தொழில் மையத்தில் கதர் கிராம தொழில் வாரிய இயக்குநர் சங்கர் ஐ.ஏ எஸ் நேரில்ஆய்வு செய்து எந்த மாதிரியான தொழில் தொடங்கலாம் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு வருவாயை ஈட்டித் தந்த இந்த கதர் கிராம தொழில் மையம்சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடந்த நிலையில் தற்போது கதர் கிராம தொழில் வாரிய ஆணையர் ஆய்வு பொது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் ஆய்வோடு நிறுத்திக் கொள்ளாமல் பலருக்கும் வேலைவாய்ப்பை தரும் நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.