சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம். நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் வெள்ளிக்கிழமை  முடிவடைந்தது. இதையடுத்து செப்டம்பர் 5 முதல் அடுத்த 3 மாதங்கள் உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், அவர்கள் விசாரிக்கவுள்ள வழக்கு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் விபரம்: நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ..சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, பொது நல மனுக்கள், 2018 ம் ஆண்டு முதலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட 2-வது அமர்வு ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள், 2017 வரையிலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கும்.


நீதிபதி என்.சேஷசாயி, 2016 ஆண்டு வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி வி.பவானி சுப்பாராயன், 2017 ஆண்டு முதலான கனிமம், நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2018 முதலான தொழிலாளர் மற்றும் அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.தாரணி, ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கின்றனர்.


நீதிபதி பி.புகழேந்தி, 2017 முதலான உரிமையில் சீராய்வு மனுக்கள், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், 2020 வரையிலான உரிமையில் மனுக்கள், நீதிபதி ஜி.இளங்கோவன், சிபிஐ, ஊழல் தடுப்பு மற்றும் 2020 முதலான பெண்கள், குழந்தைகள் எதிரான வழக்குகளின் குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள்.


நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 407 மற்றும் 482-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் மனுக்கள், 2020 முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், நீதிபதி கே.முரளிசங்கர், முதல் மேல்முறையீடு, 2021 முதலான உரிமையில் மேல்முறையீடு மற்றும் இரண்டாவது மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கின்றனர்.


நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2017 ஆண்டு வரையிலான தொழிலாளர் மற்றும் அரசுப்பணி தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆர்.விஜயகுமார், 2016 வரையிலான கனிமம், நிலச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி முகமது ஷாபிக், வரி, சுங்க வரி, மத்திய கலால், மாநில கலால் வரிகள், வனத்துறை, தொழில்துறை, அறநிலையத்துறை, வக்புவாரியம் தொடர்பான ரிட் மனுக்களையும் விசாரணை செய்கின்றனர்.