திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் திண்டுக்கல் சாலையில் இம்தாதுல்லா என்பவர் ரஹ்மானியா என்ற பெயரில் பிரியாணி ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் கேசியர் புரோட்டா மாஸ்டர் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை நேற்று மாலை இரவு இந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு சென்று தந்தூரி சிக்கன் கேட்டுள்ளனர். ஆனால் ஹோட்டலில் தந்தூரி சிக்கன் இல்லை என கூறியதால் புரோட்டா மாஸ்டருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். அதனை உடனடியாக மாஸ்டர் தயார் செய்து கொடுத்துள்ளார். அதற்கு பணம் செலுத்தும் போது பில்லில் டோக்கன் நம்பர் 85 எனவும், சிக்கன் ரைஸ் விலை ரூ.90 எனவும் இருந்துள்ளது. அப்போது அந்த கும்பல் சிக்கன் ரைஸ் ரூ.85 தானே ஆனால் நீங்கள் எப்படி? ரூபாய் 90 கேட்கலாம் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு ஹோட்டல் கேசியர் 85 என்பது டோக்கன் நம்பர் எனவும், 90 என்பது சிக்கன் ரைஸ்சின் விலை எனவும் கூறியுள்ளார். இதில், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பேசிக்கொண்டிருந்த போதே, ஹோட்டலில் கேசியரை ஒருவர் தாக்குகிறார். அப்போது, இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஹோட்டலில் தாக்குதல் நடத்திய 3 பேர் கொண்ட கும்பலுக்கு ஆதரவாக, மேலும் சிலர் சேர்ந்து கொண்டு, ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில், ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் தப்பி ஓடினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரியாணி ஹோட்டலை அடித்து நொறுக்கிய கும்பல் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி, ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள், வத்தலகுண்டு காவல் நிலையத்தை நள்ளிரவில், திடீர் முற்றுகையிட்டனர். பின்னர், ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள் பள்ளிவாசல் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சிக்கன் ரைஸ் வாங்க சென்றவர்கள் மீது, தாக்குதல் நடத்திய ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒரு தரப்பினர் திண்டுக்கல் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரு தரப்பினரும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஹோட்டல் உரிமையாளரும், தாக்குதலில் ஈடுபட்டவர்களும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பதட்டமான சூழ்நிலையில், பள்ளிவாசல் உள்ளிட்ட இப்பகுதியில், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கடந்த வாரம், வத்தலகுண்டு பெரியகுளம் சாலையில் உள்ள, பிரியாணி ஹோட்டலில் கொத்து புரோட்டா கேட்டு, ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று திண்டுக்கல் சாலையில் உள்ள, பிரியாணி ஹோட்டலில், சிக்கன் ரைஸ் விலை விவகாரத்தில், ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால், வத்தலகுண்டு பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஹோட்டல்கள் மீது தொடர்கதையாக தாக்குதல் நடத்தி வரும், சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், வத்தலகுண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.