மதுரை மாநகர் எல்கைக்கு உட்பட்ட விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலர் கண்ணன் மற்றும் சரவணன் இருவரும் இரவு நேர ரோந்து பணியில் வழக்கம்போல் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில்  நள்ளிரவு 12.30மணியளவில் நெல்பேட்டை அருகே உள்ள கடை ஒன்றின் முன்பாக  நின்றுகொண்டிருந்த போது  அந்த பகுதியில் இருந்த முகம்மது இதிரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 வருட பழமையான கட்டிடம் திடிரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்கத்தூண் காவல்துறையினர் கட்டிட உரிமையாளரான இத்ரிஸ் மற்றும் வாடகைதாரர் உட்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்களும் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மதுரையில் 110ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவிற்கு பழமையான கட்டிடங்கள் உள்ள நிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டிட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



இதேபோன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கடந்த 2020-ம் ஆண்டில் தீபாவளியன்று பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் கட்டிட விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து மாணவர்கள் இறந்த சூழ்நிலையில், மதுரையில் தனியார் நபர்களின் கட்டிடம் இடிந்த காவலர் உயிரிழந்தது  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்க ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.