மதுரையில் ஓர் புதிய உதயம் தான் ' மதுரை டிரான்ஸ் கிச்சன்'. திருநங்கைகளின் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் சமூகத்தில் தவறான பார்வையில் இருந்து விலகி முன்னேறி வருகின்றனர். முதல் டாக்டர், முதல் இன்ஸ்பெக்டர், முதல் எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் கால்பதிக்க ஆரம்பித்துவிட்டனர். அதே போல் சுயதொழில் செய்து முன்னேறியும் பிரதிபலிக்கின்றனர். உணவுத்துறையிலும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் இணைந்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஒரு புதிய முயற்சியாக மக்கள் ஆதரவுக் கோரி உணவகம் திறந்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் திறந்து வைத்து பாராட்டியுள்ளார்.
இந்த உணவகத்தில் அனைத்து பணிகளிலும் திருநங்கைகளே ஈடுபடுகின்றனர், என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு இந்த உணவகம் பயனுள்ளதாக அமையும். இதனால் உணவகத்திற்கு வெளியூர் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திருநங்கைகள், திருநம்பிகள் குறித்து சமூகத்தில் பெரும்பாலானோர் மனதில் தவறான புரிதலே இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த சமூகத்தினரை புறந்தள்ளி வைத்து விடுகின்றனர். திருநங்கைகள் கை ஏந்தும் நிலைக்கும், பாலியல் தொழில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே திருநங்கைகளின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாக்கப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் "உழைத்து வாழ்வோம்" என்ற கொள்கையோடு பதினைந்து திருநங்கைகள் ஒன்றிணைந்து "மதுரை டிரான்ஸ் கிச்சன்" என்ற பெயரில் உணவகத்தைத் திறந்துள்ளனர்.
காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, வடை , காப்பி டீ உள்ளிட்டவையும். மதியம் சாப்பாடு , சிக்கன் பிரியாணி , மட்டன் பிரியாணி , அசைவ வகைகள் , மீன்குழம்பு சாப்பாடு சைவ மற்றும் அசைவ உணவுகள். மாலையில் சப்பாத்தி , இட்லி தோசை , புரோட்டா , சிக்கன் ரைஸ் நூடுல்ஸ் , சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே கேட்டரிங் தொழில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை வளர்த்து அதில் வரும் வருவாயைக் கொண்டு அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவல் காலங்களில் அவர்களுக்கு போதுமான கேட்டரிங் ஆர்டர்கள் வராததால் மிகுந்த சிரமங்களை சந்தித்துள்ளனர். இதனால் ஒரு ஹோட்டலை வைக்கலாம் என திட்டமிட்ட ஜெயசித்ரா தனியார் நிறுவனம் மூலம் ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்று புதிய உணவகத்தை திறந்துள்ளனர். இதன் மூலம் 15 திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெற்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த உணவகம் குறித்து திருநங்கைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சித்ரா கூறுகையில், “ உணவகத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு மூலம் அடுத்தடுத்து உணவகங்களைத் திறக்கப்படும். அதன் மூலம் பல திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப்படும். தற்போது நியாமான விலையில் உணவுகள் கொடுத்து வருகிறோம். ஹோட்டல் நல்லா பிக்அப் ஆய்டா மலிவான விலைக்கு உணவு வழங்குவோம். எங்களை போன்ற திருநங்கைகளை மீட்டு எடுப்பது தான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !