கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறைக்க தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியும் பலரும்  தேவையின்றி சாலைகளில் சுற்றிதிரிகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், பழைய தத்துவ பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல் சமூக வளைதளத்தில் பரவி பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.



திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையநாயக்கனூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆர்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக இப்பள்ளில் சேர்ந்த பின்பு வெறும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இப்பள்ளியை  சக ஆசிரியர்கள் மற்றும் உள்ளூரில் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்களுக்கான நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற நவீன கல்வி முறையையும் ஏற்படுத்தினார். 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் ஏழை எளிய மாணவர்களின் பிறந்த  நாள் தினத்தன்று  பிறந்த நாள் பரிசு வழங்கி பள்ளியிலே கொண்டாடி ஊக்கப்படுத்தினார். பள்ளியின் அடிப்படை வசதி என அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்தினார். இதனால்  குறைந்த எண்ணிக்கையில் இருந்த பள்ளி  தற்போது 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியாக மாறியுள்ளது. இப்பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக போட்டி போடும் அளவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தரத்தை உயர்த்தினார்.



மேலும் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார் அதுமட்டுமின்றி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது சிறப்பாசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகளவில் உள்ளதால் தமிழக அரசு தொடர்ந்து இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு அமல் படுத்தியும் பலரும் விழிப்புணர்வின்றி சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர்.



காவல்துறையினர் பல்வேறு வழிகளில் அவர்களுடன் போராடி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கு மேலும் வழு சேர்க்கும் விதமாக அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்தர், பழைய தத்துவ பாடல் மூலம் " வீணாக வெளியே சுற்றி வினை இழுத்துக்கொள்ளும் மாந்தர்களை" என்று  தத்துவ வரிகளை கொண்ட பாடல்ளைப் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு தத்துவ வரிகளைக் கொண்ட பாடலை பாடியுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் பரவி தற்போது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் இப்பாடல் பெற்று வருகின்றது. இந்த பாடல்களை பகிர்ந்ததில், அவரது மாணவர்களுக்கு பெரிய பங்கு உண்டு.