மதுரையில் தொடர் மழை


 

மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தொடர்ச்சியாக கனமழை பெய்தது. அதன் காரணமாக மாநகரில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம், மீனாட்சி பஜார், சிம்மக்கல், செல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய இணைப்பு சுரங்கபாதையான ராஜாமில் சாலையில் உள்ள கர்டர்பால சுரங்கபாதையில் மழை நீர் அதிகளவிற்கு வரத்தொடங்கியது.

 

இதனால் இடுப்பளவிற்கு தண்ணீர் சென்றுகொண்டிருந்தபோது பைக் போன்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கனரக வாகனங்கள் கடந்துசென்றது. அந்த நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்துகொண்டே இருந்ததால் மழைநீர் அதிகளவிற்கு தேங்க்தொடங்கியதால் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. 

 

அதிகரித்த மழை நீர்:


அப்போது தண்ணீரை கடந்துசென்ற திண்டுக்கல் மாவட்டத்தை  சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பாடல் குழுவினர் சென்ற வாகனம் தண்ணீரின் நடுவே பழுதாகி நின்றது. இதனால் தண்ணீரில் இருந்து பார்வையற்றோர் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்போது  அருகில் இருந்த பொதுமக்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாக மாரியப்பன் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரையும் மீட்ட நிலையில் அம்பிகா , நாகேந்திரன் உள்ளிட்ட 3 பேர் வாகனத்தில் சிக்கிக்கொண்டனர்.

 

இதனையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி வர முடியாத சூழலில் தண்ணீரின் அளவும் அதிகரித்துகொண்டே இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனிடையே சுரங்கபாதையில் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பின்னர் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் சிக்கி தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மூவரையும் கயிறு மூலமாகவும், பார்வையற்றோரை தோளில் சுமந்தவாறும் தூக்கிவந்து பத்திரமாக மீட்டனர்.

 

நாய்குட்டி மீட்பு:


இதனைத்தொடர்ந்து தண்ணீரின் நடுவே பழுதாகி நின்ற வாகனத்தையும் கயிறு மூலமாக இழுத்து சுரங்கபாதையை கடந்து சாலையோரத்தில் நிறுத்தினர். பார்வையற்றோரை மீட்கும் பணியின்போது பார்வையற்ற பெண் வைத்திருந்த நாய்குட்டி ஒன்றையும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கைகளில் தாங்கியபடி மீட்டுவந்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைத்தபோது அதனை ஆரத்தழுவி தனது தோளில் போட்டுக்கொண்ட பார்வையற்ற பெண் தீயணைப்புத்துறையினருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். 

 

கோரிக்கை


இதே கருடர் பால சுரங்கப்பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் பெய்த கன மழையால் தேங்கிய நீரில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் பேருந்துகள் சிக்கியபோது விடிய விடிய தண்ணீரிலயே காத்துக்கிடந்த சம்பவமும் நடைபெற்றது. கருடர் பால சுரங்க பாதையில் சிறு மழைக்கு கூட மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், ஒவ்வொரு மழைக்கும் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதோடு திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்து வாகனங்கள் சிக்கி உயிருக்கு போராடும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே இதற்கு உரிய நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் இது போன்று மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்டர் பால சுரங்க பாதையில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.