ஜூன் மாதம் முதல் வாரத்தில்  பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வாகனங்களின் பராமரிப்பு குறித்து போக்குவரத்துதுறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதிகாரிகள் ஆய்வு

 

தமிழகத்தில் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் அல்லது 2  வாரத்தில் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 280 பள்ளிகளை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு பணியினை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் குமார் தொடங்கிவைத்தார். இதனையடுத்து போக்குவரத்துறை அதிகாரி சித்ரா, சிங்காரவேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் இணைந்து வாகனங்களை ஆய்வு செய்தார். 

 

17 விதி முறைகள் ஆய்வு


 

தொடர்ந்து போக்குவரத்துதுறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொறுத்தப்பட்டுள்ளதா? முதலுதவி பெட்டிகள் உள்ளதா? தீயணைப்பான்கள் செயல்படுகின்றனவா? முறையாக வாகனங்கள் பராமரிக்கப்பட்டு உள்ளனவா? வாகனங்களில் முன் பின் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட 17 விதிமுறைகளையும் ஆய்வு செய்யும் பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும், பள்ளி மாணாக்கர்களின் பாதுகாப்பு குறித்தும், அவசர காலங்களில் அளிக்கப்பட உயிர்காக்கும் சிகிச்சைகள் குறித்தும்,  அவசரகால சிகிச்சைகள் குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை குழு மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று தொடங்கும் இந்த ஆய்வுப்பணிகள் 5 தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், அரசு கூறும் அறிவுரைகளை பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலமாக இயக்கக்கூடிய வாடகை வாகனங்களும் தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற பின்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்பு இயக்கப்படும் எனவும் அவ்வாறு அனுமதி இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

 

விதி மீறும் ஷேர் ஆட்டோக்கள்

 

இந்நிலையில், பள்ளிகளின் அனுமதியின்றியும் போக்குவரத்துதுறை அனுமதியின்றி ஷேர் ஆட்டோக்களில் மாணாக்கர்கள் அழைத்துவரும் ஷேர் ஆட்டோக்கள் விபத்து அதிகரிப்பு புகார் எதிரொலியாக ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தொடர்பாக பள்ளிகல்வித்துறை மற்றும் வருவாய்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணாக்கர்களை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு மாணாக்கர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதுபோன்ற விபத்துகளில் ஈடுபடுத்திய வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தொடர்ச்சியாக வாகனங்களுடைய இயக்கம் குறித்து கண்காணிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.