திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டி அருகே குடகனாறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்துதான் ஆத்துப்பட்டி கிராம மக்கள் வெளியூருக்கு சென்று வருகின்றனர். இந்த ஊருக்கு தெற்கே சந்தானவர்த்தினி ஆறும், வடக்கே வரட்டாறும் செல்கிறது. இதனால் மழை காலத்தில் ஆறுகளில் தண்ணீர் வரும்போது இந்த ஊர் தனித்தீவு போன்று காணப்படும். இதனால் மழை காலத்தில் இந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத நிலை இருந்தது. 




இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மண்ணால் ஆன தற்காலிக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு ஆத்துப்பட்டி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் தவிப்படைந்தனர். மேலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.



 

இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் அமைச்சரிடம் பாலம் கட்டி தருமாறு மறுகரையில் இருந்தவாறே கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் அய்யம்பாளையம் செல்லும் வழியில் குடகனாற்றின் குறுக்கே சுமார் 8 கோடி மதிப்பில் ஒரு பாலம் கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இதுகுறித்து கோரிக்கை வைத்தபோது பாலம் கட்டி தரவில்லை.



 

புதிய பாலம் கட்டுவது தொடர்பாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் பேசியுள்ளேன். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ஆத்துப்பட்டி கிராமத்துக்கு புதிய பாலம் கட்டி தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன். மேலும் ரேஷன் கடை அமைக்கவும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். பின்னர் அவர் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இந்தநிலையில் நேற்று காலை முதல் தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை தற்காலிகமாக சரிசெய்யும் பணியையும், அப்பகுதியில் மேலும் மண்அரிப்பு ஏற்படாதவகையில் பாதுகாக்கும் பொருட்டு மணல் மூட்டைகளை அடுக்கும் பணியையும் தாடிக்கொம்பு பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்