'மழை நீர் சேமிப்பு திட்டத்தை பக்காவா ஃபாலோ பன்னுவோம்ல' - சாதித்து காட்டும் திருப்புல்லாணி ஊராட்சி;


ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி கிராமத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக அமைத்துள்ளதால் கடலுக்கு செல்லும் மழை நீரை தடுத்து, ராட்சத மின்மோட்டார் மூலம் 4 ஊரணிகளில் மழை நீரை தேக்குவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, நிலத்துக்கு அடியில் உள்ள உப்பு நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மழைநீர் சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்திய வீடு, அலுவலகம், நிறுவனம் ஆகியவற்றுக்குதான் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அதிரடியாக அரசு அறிவித்ததை அடுத்து எதிர்ப்புகள் இருந்தாலும் இந்த திட்டத்தை அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா தீவிரப்படுத்தினார். அதன் பின்னர் இந்த திட்டம் அரசியல் காரணங்களால் பெரியளவில் முன் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.




அதேவேளை இன்றளவும் இந்த திட்டத்தை ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி கிராமத்தில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன் கதை ஒன்று உள்ளது. திருப்புல்லாணி கிழக்குக் கடற்கரை சாலை ஓரத்தில் பொன்னங்கழிக்கானல் ஓடைக்கு மழைக் காலத்தில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து மழை நீர் அதிகமாக வந்து சேதுக்கரை கடலில் நேரடியாக கலந்து வீணாகி வந்து உள்ளது. இதனை அடுத்து பொன்னங்கழிக்கானல் ஓடையில் திருப்புலாணி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தடுப்பணைகள் கட்டி உள்ளனர்.




தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதை அடுத்து ஒடையில் மழை நீர்வரத்து அதிகளவில் வரத் தொடங்கியதால் ஒடையிலிருந்து மழைநீரை அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூம்புகள் அமைத்து 40 அடி ஆழத்தில் உள்ள மழைநீர் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர் இந்த ஊர் மக்கள். அதேபோல் ஓடையில் இருந்து மழைநீரை கொண்டு வந்து அங்கிருந்து இரண்டு ராட்சத மின் மோட்டார்களை பயன்படுத்தி கால்வாய் வழியாக ஊரணிக்கு மழை நீரை கொண்டு செல்கின்றனர். மேலும் 2 ராட்சத மின்மோட்டார்கள் மூலம் கொண்டு செல்லப்படும் மழைநீர் 15 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய மதகு வழியாக குட்டம் ஊரணி நிரப்படுகிறது. அதன்பின்னர் 6 ஏக்கர் பரப்பில் உள்ள சக்கர தீர்த்தம் தெப்பக்குளம், 2 ஏக்கர் பரப்புள்ள முஸ்லிம் தெரு குட்டம், 12 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குட்டம் அடுத்தடுத்து நிரப்பப்படுகிறது.




இப்படி 4 ஊரணியிலும் மழை நீரை தேக்கி வைப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதோடு அப்பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பயன்படும் ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு நிலத்திற்கு அடியில் உள்ள உப்பு நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புலாணி பகுதியில் ஆழ்துளை கிணறு, திறந்தவெளிக் கிணறுகள் அமைத்தால் உப்பு நீரே வந்து உள்ளது. ஆனால் தற்போது அந்த உப்பு நீரில் மாற்றமடைந்து நல்ல தண்ணீராக கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதேபோல் மற்ற கிராமங்களிலும் பெய்கின்ற பருவமழையை முறையாக தேக்கப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது முற்றிலும் தடுப்பதோடு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.