தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் சேர்ந்த கிருபா பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மெஞ்ஞானபுரம் பேருந்து நிலையம் அருகில் பஜாரின் மையப்பகுதியில் டாஸ்மாக் மது விற்பனைக் கடை இயங்கிவருகிறது. இந்த கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினசரி பல்வேறு பிரச்சினை ஏற்படுகின்றன. குறிப்பாக மது அருந்துபவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் மது விற்பனை கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுவித்து வந்தனர். 

 




 


இதை தொடர்ந்து கடையை இடம் மாற்றக் கோரி நடைபெற்ற பொது மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, திருச்செந்தூர் தாசில்தார் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் அன்று நடந்த கூட்டத்தில் மேற்படி கடையை ஆறு மாதத்திற்குள் இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் ஒத்துக் கொண்டார். ஆனால், இதுவரை கடையை இடமாற்றம் செய்யவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே,  கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார்.

 



 

இந்த மனு இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மார்க் தரப்பு வழக்கறிஞர் கடையை இடமாற்றம் செய்ய கால அவகாசம் கோரினார். இதனை அடுத்து நீதிபதிகள், ஒரு கடையை இடமாற்றம் செய்ய எவ்வளவு நாள் கால அவகாசம் எடுப்பீர்கள்? ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் கால அவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 




 

மேலும் ஒரு மதுபான கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய இழப்பு வந்துவிடாது என கூறிய நீதிபதிகள் இரண்டு நாட்களுக்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் கடையை மூடி அதற்கான  ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்படும் என எச்சரித்து வழக்கு விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.