தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," காயல்பட்டினம் நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40 ஆயிரத்து 588 பேர் இருந்தனர். தற்போது சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. ஆனால் காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் மட்டுமே உள்ளன. காயல்பட்டினம் நகராட்சி விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட சாத்தூர், குளச்சல், குழித்துறை, கீழக்கரை, குளித்தலை, ஆரணி நகராட்சிகள் அதிக வார்டுகளை கொண்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் வார்டுகளின் எண்ணிக்கை இல்லாததால் மக்களுக்கான பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே காயல்பட்டினம் நகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை மக்கள்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 40 ஆக உயர்த்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாகவிசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வார்டு மறுவரையறைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து, நகராட்சி நிர்வாகத்துறையின் கூடுதல் தலைமை செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.