சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்திற்கு கீழ் ஏராளமான அரசு ஜீப்கள் மற்றும் கார்கள் இயங்குகிறது. உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் இது போன்ற ஜீப் உள்ளிட்ட கார்களை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் மானாமதுரை யூனியனுக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.) ஜீப்பை இயக்கும் ஓட்டுநர் மலைராஜ், மது போதையில்  வாகனத்தை தனியாக இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மானாமதுரை காந்தி சிலை அருகே ஜீப்பை தாறுமாறாக ஓட்டிவந்த போது கொண்ணக்குளம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் மீது ஜீப் மோதியது.


 





 

இதில் காயம் ஏற்பட்ட ராஜாத்தி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஜீப்பை ஓட்டிவந்த மலைராஜ் பணி நேரத்தில்  மது போதையில் இருந்தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுநர் மலைராஜை தப்பிக்க வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்துவருவதாக  சொல்லப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினரிடம் பேசினோம், “விபத்து குறித்து புகார் வரவில்லை என்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை. மலைராஜ் மது போதையில் இருந்தாரா என தெரியவில்லை. முறையான புகார் வரவில்லை என்பதால் வழக்கு பதிவு செய்யவில்லை" என முடித்துக்கொண்டார்.



 

மேலும் நடைபெற்ற விபத்து குறித்து மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரியிடம் பேசினோம், “ அலுவலக பணி நிமித்தம் காரணமாக மற்றொரு அதிகாரியுடன் செய்குளத்தூர் வரை சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எனக்குத் தெரியாமல் ஓட்டுநர் ஜீப்பை எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாராக தெரிவித்துள்ளேன்" என்றார்.

 


 

ஓட்டுநர் மலைராஜ் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் மது போதையில் வாகனத்தை இயக்கியதாக தெரியவருகிறது. ஆனால் மானமதுரை யூனியனுக்கு நெருக்கமான அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என புகார் எழுகிறது. இது போன்ற தவறுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால். தொடர்ந்து இது தவறான முன்னுதாரணமாக தவறுகள் நடைபெறலாம், என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண