தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி போல பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெற்று வருகிறது. இதில் வழுக்குமர போட்டியும் முக்கியமான ஒன்று. நத்தம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வழுக்குமர போட்டி திருப்பாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில், வடக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் வழுக்குமர போட்டிகள் மிக முக்கியமானது. இந்நிலையில் கிருஷ்ணன ஜெயந்தியை முன்னிட்டு மதுரை திருப்பாலை பகுதியில் நடைபெற்ற வழுக்கு மர  போட்டியில் இளைஞர் ஒருவர் பொன்முடி அவிழ்த்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 



மதுரை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அய்யர்பங்களா அருகே உள்ள திருப்பாலை பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று இரவு உறியடி திருவிழா மற்றும் வழுக்குமர போட்டி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ஆரம்பித்த வழுக்குமர போட்டியில் சிறுவர்கள் மற்றும் ஏராளமான  இளைஞர்கள் கலந்துகொண்டனர். சாவடித் தெருவில் நடைபெற்ற இந்த வழுக்குமர போட்டி சுமார் 2 மணி நேரத்திலேயே நிறைவு பெற்றது. முதலில் சிறுவர்கள் வழுக்கு மரத்தில் ஏறி தங்களது திறமைகளை காட்டினர். இதில் 2 இளைஞர்கள் உச்சிவரை சென்றனர். அதில் மதன் என்ற இளைஞர் வழுக்குமரத்தில் இருந்த பொன்முடியை அவிழ்த்தார். வழுக்குமர உச்சிக்கு சென்று பட்டுத்துணியால் செய்யப்பட்ட பொன்முடியை அவிழ்த்த மதனை கிராம மக்கள் பாராட்டினர். பின்னர் அந்த பட்டுத் துண்டு ஏலம் இடப்பட்டது.



இதுகுறித்து இளைஞர் மதன் கூறுகையில், “வழுக்குமர போட்டியில் பொன்முடி அவிழ்த்தது பெருமையாக உள்ளது. இதற்காக என்னுடைய அணிக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். அவர்கள் கொடுத்த பயிற்சியால் மரத்தில் பொன்முடி அவிழ்க்க முடிந்தது" என்றார்.



 

மேலும், திருப்பாலை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இருக்கும் வழுக்கு மரம் மிக உயரமானது. கடந்த சில நாட்களுக்கு முன்னரே எண்ணெய்யில் தொய்த்து மரத்தை ஊர வைத்துவிடுவோம். அதனால் வழுக்கு மரம் ஏறுவது சற்று சவாலாக இருக்கும். உச்சியில் இருக்கும் ஓட்டையில் பொன்முடியை கட்டிவிடுவோம். அதனால் கையால் எடுப்பது சிரமம். பற்களால் கடித்து தான் எடுக்க முடியும். இந்தாண்டு மதன் என்ற இளைஞர் அதனை அவிழ்த்துவிட்டார். முடிச்சில் இருந்த 101 ரூபாய் பரிசை எடுத்துக் கொள்வார். பொன்முடி பட்டுதுண்டை ஏலம் இடும் பணம் கோயில் தொடர்பான செலவுக்கு பயன்படும். அதனை ஏலம் எடுக்கும் நபர்கள் மிக பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும்" என்றார்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண