ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பாச்சலூர் அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, பள்ளி சமையல் அறை அருகே உடல் கருகிய நிலையில் பெற்றோரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் ஒட்டன்சத்திரம் தாண்டிக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாச்சலூர் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் குழந்தைகளான தர்ஷினி, பிரித்திகா, பிவின்குமார் ஆகிய மூன்று குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரித்திகா வழக்கம்போல் உணவு இடைவேளையின்போது பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர்கள் மூத்த மகளான தர்ஷினியிடம் கேட்டபோது தங்கை பிரித்திகா உணவு இடைவெளியில் இருந்தே காணவில்லை என்று கூறியுள்ளார்.
உடனே குழந்தையின் பெற்றோர் இருவரும் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது பள்ளி சமையலறை அருகே பிரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் பிரித்திகாவை மீட்டு அருகில் இருந்த உறவினரின் வாகனத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது ”அப்பா” என்று மட்டும் கூறிவிட்டு குழந்தை இறந்திருக்கிறது.
குழந்தையின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பாச்சலூர் கிராம மக்கள் ஒன்று கூடி ஒட்டன்சத்திரம் தாண்டிக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தையில் மரணம் விபத்து அல்ல என்னும் சந்தேகம் வலுத்து வருவதாக கிராம மக்கள் போராடுகிறார்கள். பல கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உடற்கூராய்வுக்கு அறிக்கைக்கு பின்னே இதை உறுதிப்படுத்த முடியும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது