கோவையை சேர்ந்த ஈஷா யோகா மையம் சார்பாக ஜெகதீஸ் வாசுதேவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனது வழக்கறிஞர் தினேஷ் ராஜா மூலம் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து  அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் வெளிப்படைத் தன்மையுடன் தணிக்கை செய்ய வேண்டும். கோயில்களின் கட்டிட அமைப்பையும் அதனுடன் தொடர்புடைய நிலப் புலங்கள் குறித்தும், கோயில்களின் அசையும் அசையா சொத்துக்கள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்தும்  அவற்றின் வாடகை பாக்கி நிலவரங்கள் குறித்தும், கோயில்களில் வழக்கில் இருக்கும் சடங்குகளும் ஆன்மீக செய்முறைகளும் புழக்கத்தில் உள்ளனவா, அவற்றின் நிலவரம் என்ன என்பது குறித்தும், மக்களிடமிருந்து காணிக்கையாக பெறப்படும் தொகையின் நிலவரம் குறித்தும், கோயில் சார்ந்த செலவுகள் குறித்தும் வல்லுநர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். 

 



 

வல்லுநர்களையும் , ஆன்மிக வாதிகளையும்  கொண்டசிறப்பு  குழு  அமைத்து, கோயில் நிர்வாகம், கோயில் சடங்கு சம்பிரதாயங்களை முறையாய் கடைபிடிக்க படுகிறதா? என்று  ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கோயில்களை தணிக்கை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையில் செயல்படும் தணிக்கைத் துறையை தனியாக பிரித்து நிதித்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள கோயில்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது விரைவில் இந்தப்பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், இந்து அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை ஆய்வு செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.