தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தனிப்பாறை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). விவசாய தொழில் செய்துவருகிறார். இவருடைய மனைவி அம்சக்கொடி (48). இவர்களுக்கு மணிமாறன் என்ற மகன் இருகிறார். மணிமாறன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் நிலையில், கணேசனும், அம்சக்கொடியும் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.




கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கணேசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை அம்சக்கொடி தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தகராறாக மாற ஆத்திரம் அடைந்த கணேசன் விறகு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அம்சக்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



 

இதையடுத்து கணேசன், இறந்த மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டிற்குள் வைத்து கதவை பூட்டிவிட்டார். பின்னர் அவர் எதுவும் நடக்காததுபோல கடந்த 5 நாட்களாக தோட்ட வேலைகளை பார்த்துவந்துள்ளார்.

 

உறவினர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தன்னுடன் அம்சக்கொடி சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார் என்று கூறினார். சூழல் இப்படி இருக்க, சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அம்சக்கொடியின் உடலில் இருந்து துர்நாற்றம் வெளியேறியது.

 

காவல் துறையில் சிக்கிக்கொள்வோம் என்ற அஞ்சிய கணேசன், நேற்று மனைவியின் உடலை தோட்டத்திலேயே யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட முடிவு செய்தார். அதன்படி சாக்கு மூட்டையை பிரித்து அம்சவள்ளியின் உடலில் கயிற்றை கட்டி வீட்டின் வாசல்வரை இழுத்து வந்தார். பின்னர் கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டிற்குள் அம்சக்கொடியின் உடலை மூடி வைத்து விட்டு தோட்டத்தில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 



அந்த சமயத்தில் துர்நாற்றம் கடுமையாக வீசியது. மேலும், கணேசனின் நடவடிக்கைகள் பக்கத்து தோட்டத்தில் இருந்த அம்சக்கொடியின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

அதனடிப்பையில் கணேசன் தோட்டத்தில் இருக்கும் கோழிக்கூண்டை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் அம்சக்கொடியின் உடல் இருந்துள்ளது. இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

 




இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கணேசனை, விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், அம்சக்கொடியின் உடலை உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

தொடர்ந்து கணேசனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மனைவியை விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்ததை அவர் ஒத்துக்கொண்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்