ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் தும்மகுண்டு அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலானது இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட அங்கு அரசு சார்பில் அஞ்சலி் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக ராணுவ வீரரின் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு உடல் கொண்டுவரப்பட்டது. பின்னர் லெட்சுமணனின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது உடலானது டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து ராணுவ வீரர் லெட்சுமணன் மீது போர்த்தபட்டிருந்த தேசியகொடியானது அவரது பெற்றோர் தர்மராஜ் - ஆண்டாள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக ராணுவ வீரர் லெட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் புதுப்பட்டி கிராமத்தில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ் ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், தென் மண்டல ஐஜி அஷ்ராகார்க், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பாஜக ஆட்சியில் எதைத் தொட்டாலும் ஷாக் அடிக்கிறது- சிவகங்கையில் சிதம்பரம் சாடல்
முன்னதாக தமிழக அரசின் சார்பில் 20லட்சத்திற்கான காசோலையை ராணுவ வீரரின் பெற்றோரிடம் வழங்கினர். வீரர் லெட்சுமணனின் உடலுக்கு கிராமத்தினர் மற்றும் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் புதைக்கப்பட்டபோது அவர் கிரிக்கெட் விளையாட பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டும் புதைக்கப்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்