தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சோலையூர் கிராமம் போடி நகர் பகுதியிலிருந்து வடக்கு புறமாக 10 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி பழங்குடி இன மக்கள் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மண் குடிசை , தகர வீடுகளில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



இக்கிராமத்தில் இருக்கும் பழங்குடி இன மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காடு, தோட்டங்களில் கூலி வேலை பார்த்து கொண்டு அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு தினக்கூலியாகவே தற்பொழுது வரை வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான குடும்பங்களுக்கு மனைப்பட்டா இல்லாமல் இருப்பதால் ஒரே வீட்டில் 5 குடும்பங்கள் வசித்துவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் ரேஷன் அடையாள அட்டை இல்லாமலும், தெரு, சாக்கடை வசதி இல்லாமலும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.



மேலும் இக்கிராம மக்கள்  இந்த நவீன 21-ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் உலகத்திலும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் உப்பு நீரான ஆற்று நீரையே குடித்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வரும் நீரை அருந்துவதால் ஒவ்வாமை, சிறு நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். கோடை காலங்களில் ஆற்றில் நீர் வற்றும் காலத்தில் காலி குடங்களை எடுத்துக்கொண்டு 5 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் எடுக்கச்செல்லும் அவல நிலை இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு என பொதுக்கழிப்பிட வசதி கூட இந்த இன மக்களுக்கு கிடையாது. இதுகுறித்து அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தும் கண்டு கொள்ளவில்லை.



அவசர காலங்களில் மருத்துவமனை செல்ல வேண்டுமானால், 10 கி.மீ.தூரம் நடந்து அல்லது இரண்டு சக்கர வாகனத்தில்தான் சென்றுவர வேண்டும். இத்தகைய காரணத்தினால் நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் மினி பஸ் வசதி வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்த வண்ணமே உள்ளனர்.




ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு,சோலையூர் பழங்குடி மக்களின் உடல் மற்றும் பொது நலன் கருதி பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் , பொதுக்கழிப்பிட வசதி போன்ற கிராம அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


*தமிழர்களின் மூத்த தேவி வழிபாடு வரலாற்று கோவில் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்*


திண்டுக்கல் : கி.பி.11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த மூத்த தேவி கோவில்..!