மதுரை வீதிகளில் பிச்சை எடுத்து கிடைத்த பணத்தை இலங்கையில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 20,000த்தை வழங்கி உள்ளார்.






நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன் என்பவர் மதுரை நகர்பகுதிகளில் தினம் தோறும் யாசகம் பெற்று தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர். கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் சிரமப்படும் சமயத்தில் தான் யாசகம் பெறும் பணத்தை மதுரை மாவட்ட நிர்வாகத்தில் பொது நிவாரண நிதிக்காக ஒப்படைத்து வந்தார்.



 

கொரோனா காலத்திலும் பொது நிவாரண நிதிக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 30 தடவைக்கு மேல் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.



 

தற்போது மதுரையில் சித்திரை பெருவிழா துவங்கியதை தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், கடை வீதிகளிலும் கோயில்களிலும் முன்நின்று பிச்சை எடுத்த பணம் 20,000 ரூபாய் பணத்தை இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உதவிடும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  யாசகர் பூல்பாண்டியன்  வழங்கி உள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

”அனைவரும் பிச்சை எடுத்து உதவவேண்டும் என்பது என்னுடைய எண்ணமில்லை.  அனைவரும் உழைத்து வாழவேண்டும். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லை என்பதால் யாசகம் எடுக்கிறேன். மனித பன்பை மேம்படுத்த வேண்டும் அது தான் இலக்கு” எனவும் தெரிவித்தார் யாசகர் பூல் பாண்டியன்.