சாதியவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தமிழக ஐபிஎஸ் கேடர் போலீஸ் அதிகாரி அஸ்ரா கார்க்கை, தற்போது மதுரை மண்டல ஐஜியாக பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அஸ்ராக் கார்க், பொறியியல் படித்தாலும் காவல்துறை மீது இருந்த ஈர்ப்பால் ஐபிஎஸ் அதிகாரி ஆனவர். கடந்த 2008ஆம் ஆண்டு திருநெல்வேலி எஸ்.பியாக நியமிக்கப்பட்ட கார்க், அங்கு நடைபெற்ற கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, சாமானிய மக்களை துன்புறுத்தும் கந்துவட்டிக் காரர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினார். நெருப்பு பட்டால் பற்றி எரியும் கந்த கிடங்கு போல, எதை தொட்டாலும் சாதிய பிரச்னையாக மாறிவிடும் பதற்றமிக்க திருநெல்வேலியில், கார்க் எடுத்த நடவடிக்கைகளால் சாதிய கலவரவங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. 2010ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கார்க், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கட்சிகள் செய்யும் பண விநியோகத்தை வெகுவாக கட்டுப்படுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராட்டப் பெற்றவர்.


 



மதுரை உத்தமபுரத்தில் தீண்டாமை சுவர், ஊர் தாண்டக் கூடாது என்ற கட்டுப்பாடு என தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் இடையே கனலாக தகித்துக்கொண்டிருந்த சாதிய வன்மத்தை தன் சாதுர்யத்தால் கட்டுப்படுத்திய காட்டியவர். அதுமட்டுமில்லாமல், அதே உத்தமபுரத்தில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட உறுதுணையாக நின்று காட்டி அனைவரும் சமத்துவம் என்பதை நிறுவிக் காட்டினார். இதனால், மக்களுக்கு கார்க் மீது நம்பிக்கை கூடியது. எந்த பிரச்னையாக இருந்தாலும் எஸ்.பி கார்க்கிடம் நேரடியாக சொன்னால் தீர்வு பிறக்கும் என்ற தைரியம் அவர்களுக்கு வந்தது. இப்படி பல்வேறு நம்பிக்கையை ஏற்படுத்திய அஸ்ரா கார்க் அவர்களின் ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.




தென் மண்டல காவல் எல்லைக்குட்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் மைக் மூலமாக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.ஜி. அஸ்ரா கார்க் மைக் ஆடியோவில், ரிவெஞ்ச் ( பழிவாங்கும்)  வகையில் நடக்கும் கொலைகாரர்கள் தொடர்பாக மேல் இடத்தில் இருந்து தகவல் வரும். தகவல் கிடைத்து அதையும் மீறு ரிவெஞ்ச் கொலைகள் நடைபெற்றால் அதற்கு சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் முழு பொறுப்பேற்க  வேண்டும். தேவைப்பட்டால் டி.எஸ்.பி க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பழிவாங்கும் நோக்கில் நடைபெறும் கொலைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.








 

போதை பொருள், லாட்டரி உள்ளிட்டவைகளில் லஞ்சம் பெறுவது, முறைகேடு உள்ளிட்ட தவறுகளில் ஈடுபடும்   காவலர்கள் மீது  பணியிட மாற்றம், பணியிடை நீக்கம், குற்ற  நடவடிக்கை என 3 வகையான நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு விசாரணை சரியான முறையில் நடத்த வேண்டும், கூடுதலாக நபர்களை இணைப்பது  நீக்குவது கூடாது, யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ள கூடாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துவது கூடாது. நியாயமான முறையில் விசாரணையை நடத்தி  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சைபர் கிரைம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.

 

காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம். 1930 குறித்த விழிப்புணர்வு அவசியம். புகார் மனுக்களை விசாரிப்பது அவசியம். இருதரப்பிலும் அழைத்து, ஆவணங்கள் தேவைப்பட்டால், சரிபார்த்து முறையாக விசாரிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்தாலேயே பல புகார்கள் விசாரணை நிலையிலேயே தீர்வு காணப்படும். காவல்துறையில் கூட்டணி அமைக்காமல், பாரபட்சம் இல்லாமல் காவலர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வும் முறையாக வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.  காவல்துறையினரிடம் ஏதேனும் தகவல், புகார்கள் இருப்பின் என்னிடம் தெரிவிக்கலாம். வாட்சப்பில் அனுப்பலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.