கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த ஜெயராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில், "எங்கள் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம் இடியும் நிலையில் காணப்பட்டது இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்காக 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பஞ்சாயத்து அலுவலக கட்டுமான பணிகள் ஒப்பந்ததாரர் ராஜ்குமார் என்பவரால் செய்யப்பட்டது. தரம் குறைந்த பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் சிமெண்ட் பூச்சுக்கள் கீழே விழுவதாக புகார்கள் எழுந்தன இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரிடம் முறையாக தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானத்திற்கு சிமெண்ட் மற்றும் எம்சான்ட்டை பயன்படுத்தாமல் பாறை துகள்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. கையால் தொட்டாலே விழுந்து விடும் அளவிற்கு பலம் குறைந்ததாக கட்டுமானம் இருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் வாட்ஸ் அப் மற்றும் அஞ்சல் மூலமாக புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.
ஆகவே தூத்தூர் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்யவும் தரமற்ற முறையில் கட்டடத்தை கட்டியவர்கள் மீதும் அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊரக மேம்பாட்டு பிரிவின் கூடுதல் ஆட்சியர் மற்றும் ஒப்பந்ததாரர் ராஜ்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குற்ற வழக்கில் முன்ஜாமீன் பெற்ற விபரத்தை மறைத்துள்ளார். எனவே, அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவில் தலையிட முடியாது - மதுரை கிளை
புதுக்கோட்டையைச் சேர்ந்த கோகுல் கணேஷ், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் நிராகரிக்கப்ட்டதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.அரசுத் தரப்பில், மனுதாரர் மீதான குற்றவழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த விபரத்தை மறைத்ததுள்ளார். விண்ணப்பத்தில் கூறாவிட்டாலும், சான்றிதழ் சரிபார்ப்பின் போதாவது தெரிவிக்க வேண்டும். இதையும் மறைத்துள்ளார் என்பது பின்னாளில் தெரிந்தால், பணியை பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே உண்மையை மறைத்ததாக கருதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் குற்ற வழக்கில் முன்ஜாமீன் பெற்ற விபரத்தை மறைத்துள்ளார். எனவே, அவரது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவில் தலையிட முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.